சினிமா

முன் ஜாமீன் கோரி ஃபைனான்சியர் அன்புச்செழியன் மனு

முன் ஜாமீன் கோரி ஃபைனான்சியர் அன்புச்செழியன் மனு

rajakannan

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் தற்கொலை விவகாரத்தில் ஃபைனான்சியர் அன்புச்செழியன் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

நடிகரும் இயக்குநருமான சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கடந்த வாரம் திடீரென தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு காரணம் யார் என்பது குறித்து கடிதம் ஒன்றையும் அவர் எழுதி வைத்திருந்தார். அதில் பைனான்சியர் அன்புச்செழியன் துன்புறுத்தலால்தான் தற்கொலை செய்து கொள்வதாக கூறியிருந்தார். இதுதொடர்பாக சசிகுமார் அளித்த புகாரை அடுத்து அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

ஆனால் போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க அன்புச்செழியன் தலைமறைவாகி விட்டார். இருப்பினும் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைத்துள்ள போலீசார் அவர் வெளிநாட்டுக்கு தப்பிச் செல்வதை தடுக்க, லுக் அவுட் நோட்டீஸை அனைத்து விமான நிலையங்களுக்கும் அளித்துள்ளனர்.

இந்நிலையில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புச்செழியன் இன்று மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 8 நாட்களாக தனிப்படை போலீசார் தேடி வருகின்ற நிலையில், அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.