மீம் உலகில் பிரபலமான கமெண்ட் இது. ‘ரமணா’ திரைப்படத்தில், உயர் அதிகாரிகளிடம் சொல்ல முடியாமல் யூகி சேது கிண்டலாக வாய்க்குள் முணுமுணுக்கும் வசனம் இது. எந்தவொரு குறிப்பிட்ட வசனம் அல்லது உடல்மொழி மக்களின் மனதில் அழுத்தமாக பதிகிறதோ அதுவே மீம் போன்ற கலாசாரங்கள் இடம்பெற்று நிலைத்து வாழும்.
ரமணா திரைப்படத்தில் யூகி சேது ஏற்றிருப்பது ஒரு புத்திசாலித்தனமான காமெடியன் கேரக்டர். உண்மையில் அது அவரது அசலான பிம்பத்தின் பிரதிபலிப்பு எனலாம். ‘பஞ்சதந்திரம்’ போன்ற படங்களில் வரும் அசட்டுத்தனமான கேரக்டர்களை மட்டும் பார்த்திருப்பவர்களுக்கு யூகி சேது என்பவர் வெறும் காமெடி நடிகர் என்பதாக நினைத்திருக்கலாம்.
ஆனால் அவருக்கு பல்வேறு விதமான இன்டலெக்சுவல் பக்கங்கள் இருக்கின்றன. ஆம், நடிகர் என்பதைத் தாண்டி இயக்குநர், திரைக்கதையாசிரியர், எழுத்தாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று பல பரிமாணங்களைக் கொண்டவர். அவர் தொகுத்து வழங்கிய ‘நையாண்டி தர்பார்’ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சி பிரபலமாகியது. நிகழ்ச்சியால் அவர் மேலும் பிரபலமானாரா, அவரால் அந்த நிகழ்ச்சி பிரபலமானதா என்று சொல்ல முடியாத அளவிற்கு இருந்தது.
சினிமா தொடர்பான தலைப்பில் ஆய்வு செய்து டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கும் யூகி சேது, கவிதை பாட நேரமில்லை (1987), மாதங்கள் ஏழு (1993) என்று இரண்டு திரைப்படங்களையும் இயக்கியிருக்கிறார். அதென்னமோ தெரியவில்லை, சினிமாவை நன்கு கற்றவர்கள், படம் இயக்கும் போது அது வணிகரீதியான வெற்றியை அடையாது என்பதைப் புரிந்து கொள்ளும் அதே சமயத்தில் சுமாரான படைப்பாக மாறும் விபத்தையும் எதிர்கொள்கிறது. அனந்து, லெனின் என்று சில முன்உதாரணங்கள் நினைவிற்கு வருகின்றன. (பாய்ஸ் படத்தில் விவேக் சொல்லும் காமெடி வசனம் போல ‘ஒரிஜினல் போல இருக்கு. அதான் ஒத்துக்கலை!).
அடையார் திரைப்படக் கல்லூரியில் படித்த யூகி சேது, தான் இயக்கிய படத்திற்காக விருது வாங்கியிருக்கிறார். ஓர் இத்தாலிய மொழி குறும்படத்தில் முன்னணி பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். இன்டலெக்சுவல் காமெடி என்னும் ஜானரில் யூகி சேது ஒரு முக்கியமான அடையாளம்.
ரமணா திரைப்படத்தில் யூகி சேதுவின் பாத்திரம் என்பது அவரது இயல்பான குணாதிசயத்தோடு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருவகையில் இது டெம்ப்ளேட் பாத்திரம்தான். ஒரு சிக்கலான விஷயத்தை தீர்க்க வேண்டிய உயர் பொறுப்பில் இருப்பவர்கள் தங்களின் முட்டாள்தனங்களால் பயங்கரமாக சொதப்புவார்கள். ஆனால் கீழ்நிலையில் உள்ள ஒரு புத்திசாலி அந்தச் சிக்கலை தீர்க்க முயல்வான். ஆனால் அதிகாரத் திமிர் காரணமாக அவனுடைய ஆலோசனைகளை உதாசீனம் செய்வார்கள். “யோவ்.. வென்றுகளா.. அவன் சொல்றதை கொஞ்சமாவது கேளுங்கய்யா” என்று பார்வையாளர்கள் மைண்ட் வாய்ஸில் பதறும்படியாக இந்தக் காட்சிகள் எழுதப்பட்டிருக்கும்.
ரமணா திரைப்படத்தின் ‘கான்ஸ்டபிள்’ சரவணன் பாத்திரமும் இதுவே. அரசுத் துறை பணியாளர்களில் லஞ்சம் வாங்கும் ஆசாமிகளை கடத்திச் சென்று அதில் அதிக லஞ்சம் வாங்கிய ஆசாமியைக் கொல்கிறது ACP என்கிற இயக்கம். இதன் மூலம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளுக்கு உயிர் பயத்தைக் காட்டி சமூகத்தில் லஞ்சத்தை ஒழிப்பதுதான் அந்த இயக்கத்தின் நோக்கம்.
‘இதென்னப்பா.. கொக்கு தலையில் வெண்ணைய் வைத்து பிடிக்கிற கதையாக இருக்கிறதே?’ என்றெல்லாம் லாஜிக் பார்க்கக்கூடாது. விஜயகாந்த்தின் கரியரில் பிரம்மாண்டமான வெற்றியைத் தந்த படம் இது. வணிகரீதியாகவும் சிறப்பாக ஓடி லாபத்தைச் சம்பாதித்தது. அந்த அளவிற்கு திரைக்கதையிலும் மேக்கிங்கிலும் அசத்தியிருந்தார் இயக்குநர் முருகதாஸ்.
“ஒரு அரசு அலுவலத்துல லஞ்சம் வாங்கற 15 அதிகாரிகளைக் கடத்திச் சென்று அவர்களில் அதிகமாக லஞ்சம் வாங்கியிருக்கிறவரை கொலை செய்கிறார்கள் என்றால், இந்த லஞ்ச நடவடிக்கைகளை அதே அலுவலத்தில் இருக்கிற ஒருவர்தான் செய்ய முடியும். எனில் 15 பேர் கொண்ட குழு இதைச் செய்கிறது” என்று உயர் காவல்துறை அதிகாரிகள் விவாதம் செய்து கொண்டிருக்க..
‘ஒரு நிமிஷம் சார்’ என்று ஓரமாக நின்றிருக்கும் கான்ஸ்டபிள் சரவணன் விவாதத்திற்குள் அனுமதியில்லாமல் நுழைகிறான். “இது 15 போ் மட்டும் இல்ல சார்.. தமிழ்நாடு முழுக்க 206 தாசில்தார் அலுவலகம் இருக்கு. அப்படின்னா எல்லா ஆபிஸ்லயும் ஒருத்தன் இருந்திருக்கான். இது வெள்ளிக்கிழமை ஆரம்பிச்சு திங்கட் கிழமை நடக்கற வேலையில்ல. பல வருட திட்டம். இது தீவிரவாத இயக்கமும் இல்ல. மக்களோட கலந்திருக்காங்க. இந்த ஆளுங்களை ஒன்றிணைக்கிற வோ் எங்கயோ இருக்கு” என்று சரவணன் சொல்ல அனைத்து அதிகாரிகளும் திகைப்படைகிறார்கள்.
அதிகமாக லஞ்சம் வாங்கியிருந்த தாசில்தாரர் கொல்லப்படுகிறார். “இந்த சுத்திகரிப்பு ஒவ்வொரு துறையிலும் தொடரும்” என்று ACP இயக்கம் அறிவிக்கிறது. “எந்தத் துறைல எப்ப நிகழும்ன்னு எப்படி கண்டுபிடிக்கிறது.. யாருக்காவது யோசனை ஏதாச்சும் இருக்கா?” என்று அடுத்த விவாதத்தில் அதிகாரிகள் தலையைப் பிய்த்துக் கொள்ள சரவணன் கை தூக்குகிறான்.
இந்த முறை இவனுடைய யோசனையை கேட்க விரும்பாத அதிகாரிகள் “ஜீப்ல பெட்ரோல் ஃபில் பண்ணிட்டியா.. ஏர் செக் பண்ணியா.. போய் வண்டியை நிழல்ல போடு” என்று துரத்தி வெளியே அனுப்பி விடுகிறார்கள். இதைக் கண்டு சக கான்ஸ்டபிள் ஒருவன் விழுந்து விழுந்து சிரிக்கிறான். “ஏம்ப்பா.. நீயொரு சாதாரண கான்ஸ்டபிள். ஜீப் ஓட்டறவன். அந்த வேலையைப் பார்க்காம இதுக்குள்ள எல்லாம் நுழைஞ்சு அதிகாரிகளைப் பகைச்சுக்கறே?” என்று கேட்கிறான்.
இந்த இடத்தில் சரவணன் என்கிற பாத்திரத்திற்கு ஒரு சரியான லாஜிக்கை சேர்த்திருக்கிறார் இயக்குநர். சரவணன் கோபமாக அதற்கு பதில் சொல்கிறான். “எங்கப்பா ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். எங்க தாத்தா வெள்ளைக்காரன் காலத்துல இருந்து போலீஸா இருந்திருக்காரு. நான் எஸ்.ஐ மெரிட்ல பாஸ் பண்ணியிருக்கேன். லஞ்சம் கொடுக்க முடியாதுன்றதுக்காக கான்ஸ்டபிளா இருக்கேன். இந்தக் கேஸை எப்படியாவது கண்டுபிடிச்சு பிரமோஷன் வாங்கலாம்ன்னு பார்த்தா. இப்படி கேலி பண்றியே?”” என்று கேட்பதன் மூலம் சரவணனின் புத்திசாலித்தனத்திற்கும் கோபத்திற்கும் ஒரு நியாயம் கிடைத்து விடுகிறது. இந்தப் படமே ஆதாரமாக லஞ்ச ஒழிப்பைப் பற்றி பேசுகிற படம் என்பதால் சரவணனின் பின்னணியில் இதில் சரியாகப் பொருந்துகிறது.
“ஸாரிப்பா.. கேலிலலாம் பண்ணலை. இதை நீ எப்படி கண்டுபிடிப்பே?” என்று அவன் கேட்க சரவணன் தன்னுடைய பிளானை தீவிரமாக விவாதிக்கிறான். “ஒரு ஆபிஸ்ல லஞ்சம் வாங்கறவங்களையெல்லாம் ஒருத்தன் காட்டிக் கொடுக்கறான்னா அவன் நிச்சயம் லஞ்சம் வாங்காத நேர்மையானவன்னா இருப்பான். போறேன். மெடிக்கல் லீவ்ல போறேன். தெருத் தெருவா அலைஞ்சு இந்த கேஸ் சம்பந்தப்பட்ட எல்லோரையும் விசாரிச்சு உண்மையைக் கண்டுபிடிக்கறேன்” என்கிற சபதத்துடன் சரவணன் கிளம்புகிறான்.
ACP இயக்கத்தின் லஞ்ச சுத்திகரிப்பு மேலும் பல துறைகளில் தொடர்ந்து கடைசியில் காவல்துறையில் வந்து நிற்கிறது. அதிகமாக லஞ்சம் வாங்கிய அதிகாரி கொல்லப்படுகிறார். “பார்த்தியா.. அப்பவே சொன்னேன். இதுக்குப் பின்னாடி இருக்கறவன் சாதாரண ஆசாமி கிடையாது. கடைசில நம்ம கிட்டயே வந்துட்டான்” என்று சரவணன் சொல்ல “அதெல்லாம் சரிப்பா.. நீ மெடிக்கல் லீவ்ல போனியே. என்ன ஆச்சு?” என்று சக கான்ஸ்டபிள் கேட்க “நான் ஏறத்தாழ ஆளை நெருங்கிட்டேன்” என்று உற்சாகமாக சொல்லும் சரவணன், தன்னுடைய தரவுகளை விவரிக்கிறான்.
“எல்லா தாலுகா ஆபிஸ்லயும் விசாரிச்சேன். அங்க இருக்கிற அதிகாரிகங்க ஒவ்வொருத்தர் பத்தியும் தகவல் எடுத்தேன். அதுல ஒரே ஒருத்தன் மட்டும்தான் நோ்மையான ஆசாமியா இருக்கான். இப்படியே இன்னொரு ஊர்லயும் தகவல் சேகரிச்சப்போ அந்த ஆபிஸ்லயும் ஒரு நோ்மையானவன் இருக்கான். ஆனா இந்த ரெண்டு பேரையும் ஒப்பிட்டா ஒற்றுமையே இல்ல. எல்லாத் தகவல்களும் வேற வேறயா இருக்கு. இருந்தாலும் பிடிச்சிடுவேன்” என்று உறுதியாக சொல்கிறான் சரவணன்.
இந்தப் பாத்திரத்தைக் கையாள்வதற்கென்று யூகிசேது பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. சினிமா கான்ஸ்டபிள் போல எந்தவித செயற்கைத்தனத்தையும் செய்யவில்லை. தலையை ஆட்டி ஆட்டி வேகமாக வேகமாக பேசும் அவரது அதே உடல்மொழியைத்தான் பின்பற்றியிருக்கிறார்.
நோ்மையான அதிகாரிகள் பற்றிய அனைத்து தரவுகளையும் சேர்க்கும் சரவணன், அதில் ஏதாவது ஒற்றுமை இருக்கிறதா என்று கணினியின் மூலம் சோதிக்கிறான். அந்தச் சோதனையில் ஓர் ஆச்சரியகரமான உண்மை கிடைக்கிறது. அவர்கள் எல்லோருமே ஒரே கல்லூரியில் படித்தவர்கள் என்கிற உண்மை. இந்த வெளிச்சம் அவருக்கு முடிதிருத்தும் கடையில் ஒரு தற்செயலான உரையாடலில்தான் கிடைக்கிறது.
இந்த வழக்கை கண்டுபிடிக்க முடியாமல் தமிழக காவல்துறை திணறுவதால் மத்திய அரசிலிருந்து ஒரு சிறப்பு அதிகாரி வருகிறார். நிகழ்கிற விவாதத்தில் சரவணன் உள்ளே வர, வழக்கம் போல் மற்ற அதிகாரிகள் அவனை ஏளனமாகப் பேசி வெளியே அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் டெல்லி அதிகாரி இவனை அழைத்து விசாரிக்க “இப்படித்தான்.. வெளில போ.. வெளில போன்னு சொல்லி நிராகரிக்கறாங்க. நான் மெடிக்கல் லீவ் போட்டு பல விஷயங்களை கண்டுபிடிச்சிருக்கேன். இன்னும் இரண்டு நாள் லீவ் கொடுத்தா இந்த கேஸையே முடிச்சிருவேன்” என்று ஆதங்கத்துடன் பொங்குகிறான்.
அவன் சேகரித்து வைக்கும் விசாரணையின் தரவுகளை பார்க்கும் டெல்லி அதிகாரி பிரமித்துப் போய் “அடப்பாவி!.. ஏறத்தாழ கேஸையே முடிச்சிட்டியே. நாளைக்கு நாம ரெண்டு பேரும் விசாரணைக்கு போவோம். உனக்கு நான் ஜீப் ஓட்டுகிறேன்” என்று சொல்லி அவனைப் பெருமைப்படுத்துகிறார்.
தமிழர்கள் சென்டிமென்டல் முட்டாள்களா?!
லஞ்சம் ஒழிவதின் காரணமாக அடித்தட்டு மக்கள் ஆதாயமடைவதால் குற்றவாளியை காட்டிக் கொடுக்க மறுக்கிறார்கள். “கேள்விப்பட்டிருக்கேன். தமிழ்நாட்டு ஆளுங்க எல்லாம் சென்டிமென்டல் முட்டாள்கள்” என்று டெல்லி அதிகாரி வெடிக்க ஓரிடத்தில் “தமிழங்க ஒருத்தர மேல அத்தனை சீக்கிரம் பாசம் வெக்க மாட்டாங்க. வெச்சிட்டாங்கன்னா.. அத்தனை சீக்கிரம் மறக்க மாட்டாங்க” என்று தமிழ் சென்டிமென்ட்டிற்கு விளக்கம் தருகிறான் சரவணன்.
இறுதிக்காட்சியில், தன்னுடைய மாணவர்கள் போலீஸால் சித்திரவதை செய்யப்படுவதை தாங்க முடியாத ரமணா (இங்க அடிச்சா.. அங்க வலிக்கும் என்பதும் சரவணனின் ஐடியாதான்!) காவல்துறையிடம் சரண் அடைகிறார். வரை மரண தண்டனைக்காக இட்டுச் செல்லும் போது வழியில் சந்திக்கும் சரவணன் “நீங்க இருந்த காலேஜ்ல நானும் படிச்சிருந்தா.. நானும் உங்க வழிக்குத்தான் வந்திருப்பேன்” என்று ஆமோதிப்பதின் மூலம் லஞ்சத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் அவனுடைய கோபமும் வேதனையும் வெளிப்படுகிறது.
அதிகார அரசியல் காரணமாக முட்டாள் அதிகாரிகளால் எப்போதும் வெளியே துரத்தப்படுகிற, புத்திசாலித்தனமான கான்ஸ்டபிள் என்னும் பாத்திரத்தை யூகி சேது மிக அருமையாக கையாண்டு அந்தப் பாத்திரத்தை இன்றைக்கும் மறக்கமுடியாதபடி செய்திருப்பது சிறப்பான விஷயம்.