மனோரமா - ஒரு நீண்ட காலக்கட்டத்திய தமிழ் சினிமாவின் ‘அம்மா’ கேரக்டராக இருந்தவர். அதற்கு முன்பாக, காமெடி நடிகையாக ஏராளமான படங்களில் நடித்திருந்த மனோரமா, குணச்சித்திர பாத்திரத்திற்கு எளிதில் கூடுபாய்ந்து அதிலும் பிரகாசித்தார். பொதுவாகவே நகைச்சுவை நடிகர்களுக்கு குணச்சித்திர நடிப்பு எளிதாக கைகூடும் என்பதற்கான உதாரணங்களை இந்தத் தொடரில் ஏராளமாக பார்த்து வருகிறோம்.
‘அம்மா’ காரெக்டரில் மனோரமா சிறப்பாக நடித்ததில் ஒன்றாக ‘ஜென்டில்மேன்’ திரைப்படத்தைச் சொல்லலாம்.
பிள்ளைகள் கல்வி கற்பதில் அப்பாவின் உழைப்பும் வழிநடத்தலும் இருப்பதை மறுக்க முடியாது. இருந்தாலும் இந்த விஷயத்தில் பொதுவாக அம்மாக்களின் தியாகம்தான் கூடுதலாக இருக்கிறது. தான் என்ன கஷ்டப்பட்டாவது பிள்ளைகளுக்கு நல்ல கல்வியைத் தந்து விட வேண்டும் என்பதற்காக பல சிரமங்களை அம்மாக்கள் எதிர்கொள்கிறார்கள். குறிப்பாக தந்தை இல்லாத வீடுகளில் இந்தப் போராட்டம் மிகவும் தீவிரமாக இருக்கும்.
ஒரு விஷயம் தன்னிடம் இல்லாத போதுதான் அதன் அருமை நன்றாகப் புரியும் என்பார்கள். அது போல, கல்வி கற்காத அம்மாக்கள்தான், தங்களின் பிள்ளைகள் நல்ல கல்வியைப் பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று போராடுகிறார்கள். கல்வி கற்ற அம்மாக்களுக்கு கூட இப்படியொரு ஆவேசம் இருக்குமா என்று தெரியாது.
தனது மகனின் உயர் கல்விக்காக, ஒரு பாமரத் தாய் மேற்கொள்ளும் சிரமங்களும் போராட்டங்களும் தியாகமும் ஒரு குறும்படத்தின் கவிதையாக ‘ஜென்டில்மேன்’ படத்தில் ‘பிளாஷ்பேக்’ காட்சியாக வருகிறது. இந்தப் படத்தின் படத்தின் மிகச் சிறந்த அம்சமே இந்த பிளாஷ்பேக்தான். பணத்தை கொள்ளையடிக்கும் ஹீரோவின் பின்னணி இந்தக் காட்சியின் மூலம்தான் தெரியவந்து, அந்தக் குற்றத்திற்கு ஒருவகையான நியாயத்தை சேர்த்து விடுகிறது.
கிருஷ்ணமூர்த்தி என்கிற கிச்சா (அர்ஜூன்) ரமேஷ் (வினீத்) ஆகிய இருவரும் நண்பர்கள். ரமேஷிற்கு டாக்டர் ஆவது என்பதென்பது இளம்வயது கனவு. லட்சியம் என்று சொல்லலாம். ஆனால் கிச்சா டாக்டர் ஆக விரும்புவதற்கு அவனது அம்மாதான் காரணம். ‘வாயில் நுழையாத மருத்துவப் பெயர் கொண்ட நோய்’ காரணமாக அவனது அப்பா இறந்து போகிறார். தன் பிள்ளை டாக்டர் ஆகி அது போன்ற நோய்களை ஒழிக்க வேண்டும், மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்ய வேண்டும் என்கிற லட்சியவாத கனவை வைத்திருப்பவர், கிச்சாவின் அம்மா.
இந்த இரண்டு மாணவர்களும், ப்ளஸ் 2 தேர்வில் மாநிலத்திலேயே முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பெறுகிறார்கள். இதற்கான பாராட்டு விழா கல்வியமைச்சர் தலைமையில் நடக்கிறது. (அர்ஜூனை +2 மாணவனாக காண்பதற்கு சற்று கல்நெஞ்சம் வேண்டும்).
கிச்சாவின் பெயரை மேடையில் அறிவிக்கும் போது மனோரமா ஒரு எக்ஸ்பிரஷன் தருவார். சில நொடிகள் மட்டுமே வரும் காட்சிதான். பெருமிதம், பெருமை, பாசம், மகிழ்ச்சி உள்ளிட்ட பல விஷயங்கள் முகத்தில் கலவையாக பொங்க தலையை மேலும் கீழும் ஆட்டுவார். “என் பையன்தான்.. அவன்..” என்று மற்றவர்களிடம் சொல்லாமல் சொல்கிற எக்ஸ்பிரஷனை பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியூட்டும்படியாக வெளிப்படுத்துவார்.
இந்தச் சிறு காட்சியை பார்க்கிற ஒவ்வொரு தாயும் அந்த உணர்ச்சியை தமக்குள் உணர முடியும். கிளிஷேவாக இருந்தாலும் வேறு வழியில்லை. இந்த திருக்குறளைத்தான் மேற்கோள் காட்ட முடிகிறது. ‘ஈன்றபொழுதின் பொிதுவக்கும்’ என்கிற குறளின் பெருமைக்கு உதாரணமாக மனோரமாவின் இந்த எக்ஸ்பிரஷனை காட்டினாலே போதும்.
பிறகு கிருஷ்ணமூர்த்தி நகர்ந்து மேடையை நோக்கி செல்லும் போது ‘என் பையன்.. என் பையன்’ என்று மகிழ்ச்சி பொங்க கூட்டத்தை வழி விடச் சொல்வார். இதை வசனமாக வைத்திருக்கத் தேவையில்லைதான். அந்த எக்ஸ்பிரஷனே போதும்தான். என்றாலும் தமிழ் சினிமாவில் சில விஷயங்களை இரண்டு மூன்று முறை அண்டர்லைன் செய்து சொன்னால்தான் பார்வையாளர்களுக்குப் புரியும் என்பதாக தமிழ் சினிமா புரிந்து வைத்திருப்பது ஒருவகையான அபத்தம்.
“இந்தப் பரிசு எனக்கு கிடைக்க காரணம் எங்க அம்மா பொன்னம்மாதான்.. அவங்கதான் என்னைக் கஷ்டப்பட்டு படிக்க வெச்சாங்க” என்று மேடையில் கிச்சா சொல்ல, பெருமிதத்துடன் மனேரமா தரும் முகபாவமும் அருமையாக இருக்கும். “ அதனால எங்க அம்மா கையால இந்தப் பரிசை வாங்க விரும்பறேன்” என்று கிச்சா மேடையில் கோரி்க்கை வைக்கும் போது திடுக்கும் எக்ஸ்பிரஷனைத் தருவார் மனோரமா.
அம்மாவை மேடைக்கு அழைத்துச் செல்ல கிருஷ்ணமூர்த்தி வரும் போது “என்னடா.. கண்ணு.. தடால்ன்னு இப்படிப் பண்ணிப்பு்ட்டே ..” என்று வெட்கமும் தயக்கமும் சிணுங்கலுமாக உடன் வருவார். ஒரு பாமரத் தாயின் தயக்கத்தையும் சங்கடத்தையும் அந்த உடல்மொழி கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கும். இதே காட்சியில், ஒருவேளை மனோரமாவை மாவட்ட கலெக்டராக நடிக்கச் சொல்லியிருந்தால் முற்றிலும் வேறுவிதமான உடல்மொழியைத் தந்து அசத்தியிருப்பார் என்பதில் சந்தேகமில்லை.
மேடையை அடைந்ததும் அமைச்சரை பார்த்து பவ்யமாக கும்பிட்டு பரிசை வாங்கி மகனிடம் அளித்த பிறகு, மனோரமா நிகழ்த்தும் நடிப்பானது அடுத்தக் கட்டத்திற்கு உயரும். ‘வாம்மா’.. என்று அம்மாவை திரும்ப அழைத்துச் செல்ல கிச்சா முயலும் போது “இருப்பா.. வந்தது வந்துட்டேன்.. ஒரு வார்த்தை. ஒரேயொரு வார்த்தை.. நான் பேசணும்’ என்று அமைச்சரிடம் வேண்டுகோள் வைக்க, பொதுமக்களின் முன்னிலையில் அமைச்சரால் எப்படி மறுக்க முடியும்? “சரி…” என்கிற மாதிரி அவர் தலையாட்டுகிறார்.
அடுத்த கணத்தில் வெளிப்படும் மனோரமாவின் நடிப்பில் வெள்ளந்தித்தனமும் மெல்லிய நகைச்சுவையும் கலந்திருக்கிறது. என்னதான் குணச்சித்திர அம்மாவாக இருந்தாலும் அவருக்குள் இருக்கும் நகைச்சுவை தன்னியல்பாக வெளிப்படும்தானே?! மைக் இருக்கும் இடத்தை நோக்கி கைகாட்டும் மனோரமா “அங்கதானே.. பேசணும்.. ஆமாம்.. எல்லாம் அங்கதான் பேசினாங்க” என்று தானே கேள்வியும் கேட்டுக் கொண்டு பதிலையும் சொல்லிக் கொண்டு மைக்கை நோக்கி நகர்வார்.
அடுத்த தருணத்தில் அவர் சாதாரணமாக மைக்கில் பேசியிருந்தால் கூட இந்தக் காட்சியில் ருசியிருந்திருக்காது. உயரமாக இருக்கும் மைக்கில் தலையை எக்கிப் பார்த்து பிறகு அதை கீழே இறக்கி அதன் வாயில் தட்டி ‘ஹலோ.. ஹலோ.. மைக் டெஸ்ட்டு…’ என்று சொல்லுமிடத்தில் பார்வையாளர்களுக்கு சிறு புன்னகை வராமல் போகாது. அவரது வெள்ளந்தித்தனம் அத்தனை க்யூட்டாக வெளிப்பட்டிருக்கும்.
“நான் ஒரு சமையக்காரிங்க. பள்ளிக்கூடத்துல ஆயா வேலை” என்னும் போது கையை தன்னால் கட்டிக் கொண்டு ஒருவிதமான பணிவை உடல்மொழியில் கொண்டு வருவார். இதெல்லாம் இயக்குநர் சொல்லித் தருவதா அல்லது தனது நெடிய அனுபவத்தால் மனோரமா தன்னிச்சையாக செய்வதா என்று ஆச்சரியமாக இருக்கும்.
அடுத்த கணமே அந்தப் பணிவு மாறி முகத்தில் உணர்ச்சிகரம் பொங்க “இப்படியெல்லாம் என் புள்ள பரிசு வாங்கறத பார்க்க அவங்க அப்பா உசுரோட இல்ல. டாக்டருங்க எல்லாம்… ஏதோ வாயில நொழயாத.. பேரு வெச்ச வியாதின்னு சொன்னாங்க.. அதுல போயிட்டாரு” என்று உருக்கமாகச் சொல்லும் மனோரமா, அடுத்த கணத்தில் பரவசம் பொங்க “என் புள்ள இத்தோட நிக்காம பொிய பொிய படிப்பெல்லாம் படிச்சு டாக்டர் ஆவணும்..” என்று கையை உயர்த்தி முழக்கமிடும் இடத்தில் சமூகத்திற்கு சவால் விடுவது போல இருக்கும்.
“அவங்க அப்பாருக்கு வந்த வியாதி.. இந்த உலகத்துல யாருக்கும் வராம பண்ணணும்.. என்னை மாதிரி ஏழை பாழைங்களுக்கெல்லாம் இலவசமாக மருத்துவம் செய்யணும்” என்று தன் மகனின் வளர்ச்சிக்காக மட்டுமல்லாமல் பொதுநலக் கோரிக்கையும் அந்தப் பாமரத்தாயின் வேண்டுதலில் கலந்திருப்பது நெகிழ்ச்சியையூட்டக்கூடியது.
“இதுக்கு மேடைல இருக்கற பெரியவங்கள்லாம் உதவி பண்ணணும்..” என்று அனைவரையும் கையெடுத்துக் கும்பிடுகிறார். “அதுக்கு என்னான்னா.. என்னான்னா.. இந்த ரெண்டு பசங்களையும் டாக்டர் ஆக்கிடுங்க.. என் தெய்வமே” என்று அமைச்சரின் காலில் விழுகிறார். அதிகாரத்தில் உள்ளவர்களைக் கண்டால் காரணமே இல்லாமல் கையெடுத்து கும்பிடுவதும் காலில் விழுந்து விடுவதும் எளிய மக்களின் அடிப்படையான குணாதிசயம். அவர்களால் அதைத்தான் உடனடியாக செய்ய முடியும்.
“கவலைப்படாதம்மா.. கண்டிப்பா. அந்த ரெண்டு பசங்களுக்கும் டாக்டர் சீட்டு கிடைக்கும். அதுக்கு நான் பொறுப்பு” என்று அமைச்சர் மேடையில் வாக்கு தருகிறார். அரசியல்வாதிகள் தரும் வாக்கிற்கு என்ன மதிப்பு என்பதை அரசியல் அறிந்தோர் அறிவார்கள். ஆனால் பாவம்.. அந்தப் பாமரத்தாய்க்கு என்ன தெரியும்? “இது போதும்யா” என்கிற மகிழ்ச்சியை வசனத்தில் அல்லாமல் உள்ளம் குளிர நன்றி சொல்லும் உடல்மொழியில் வெளிப்படுத்துவார் மனோரமா.
அடுத்த காட்சியில், மருத்துவர்களுக்கான சீருடையில் வருகிறான் ரமேஷ். இப்போதே தான் டாக்டராகி விட்ட மிதப்பில் இருக்கிறான். அதுதான் அவனுடைய வாழ்க்கையின் லட்சியம் என்பதால் வெளித்தோற்றம் முதற்கொண்டு இப்போதே தயாராகி விட்டான். வெள்ளை பேண்ட், கோட் உடன் மருத்துவ சீருடையில் வரும் ரமேஷைப் பார்த்து மகிழ்ச்சியாக சிரிக்கும் மனோரமாவிடம் கூடவே மெல்லிய கிண்டலும் வெளிப்படுகிறது..
‘அடடடடே.. அதுக்குள்ள டாக்டர் ஆயிட்டியா..” என்று அவனுடைய உடையைச் சுற்றி வந்து பார்க்கிற மனோரமா, அடுத்ததாக கிராமத்தின் தாய்மார்களுக்கே உரித்தான உடல்மொழியில் ‘ஆளாவதற்கு முன்னாலேயே அரச மரத்தை சுத்தினாளாம்.. எவளோ ஒருத்தி.. அவசரத்தைப் பாரு” என்று கிண்டலடித்தபடியே ரமேஷை அழைத்துச் செல்கிறாள்.
பள்ளிக்கூட பிள்ளைகளுக்கு மதிய உணவு சமைப்பவர் என்பதால் இருவரும் அங்கு சென்று அமர்கிறார்கள். விக்ஸ் டப்பாவை வைத்து தானே உருவாக்கிய ஸ்டெதஸ்கோப்பை காட்டுகிறான் ரமேஷ். ஏரோப்ளேன் பொம்மையை வைத்து தன்னை பைலட்டாக கற்பனை செய்து கொள்ளும் சிறுவனைப் போல இருக்கிறது அவனது செய்கை. “இத பாரு.. இதுதான் ஒரு டாக்டருக்கு ரொம்ப முக்கியம்.. இத வெச்சு.. இங்க வெச்சு கேட்டா.. லப்டப் லப்டப்..ன்னு இதயம் வேலை செய்யறது கேக்கும்” என்று ரமேஷ் சொல்ல, அந்தச் சமயத்தில் இருமுகிறார் மனோரமா. “என்ன.. இப்படி இருமறீங்க” என்று ரமேஷ் கேட்க “இது புகை இருமல்” என்று மனோரமா பாமரத்தனத்துடன் அலட்சியமாக சொல்கிறார்.
“இல்ல.. இது.. respiratory problem…Chronic acute bronchitis pressure..” என்று மருத்துவ மொழியில் ரமேஷ் சொல்ல, அடுத்து மனோரமா கேட்கும் கேள்வி மிக நுட்பமானது. “இப்படி நீ இங்லிஷ்ல பேசறியே.. இதெல்லாம் கிருஷ்ணமூர்த்திக்கு தெரியுமா.. படிக்காம விட்றப் போறான் கண்ணு.. நீதான் அவனுக்கு சொல்லித் தரணும்” என்று ரமேஷின் தாடையைப் பிடித்து செல்லமாக கெஞ்சும் இடம் இருக்கிறதல்லவா? அது ஒரு பாமரத்தாய்க்கே உரித்தானது. சிறப்பாக படிக்கிற பிள்ளைகளைக் கண்டால் பொறாமையுடன் கூடிய பெருமையைக் கொள்வதும், அதே போல் தன் பிள்ளையும் ஆக வேண்டும் என்கிற கனவை வெளிப்படுத்துவதும் படிக்காத தாயின் இயல்பான செய்கைகள்.
மேடையில் சொன்ன வாக்கை அமைச்சர் பின்பு உதறி எறிவதும், “துட்டு கொடுத்தாதான் சீட்டு” என்று முரட்டுத்தனமாக பேசி இவர்களைத் துரத்தியடிப்பதும், தனது மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கிப் பார்க்க வேண்டும் என்பதற்காக, தான் பொத்தி பொத்தி வைத்திருந்த தாலி உள்ளிட்ட நகைகளை மனோரமா விற்கச் சொல்வதும், “ஏம்மா.. இதையும் விக்கணுமா.. இந்தப் பணம் போதாதும்மா..” என்று சொல்லும் மகனிடத்தில் “நான் இருக்கண்டா.. கண்ணு” என்று மறைமுகமான கண்ணீர் பொங்க விடை தருவதும், மீதப் பணத்திற்காக தன் உயிரையே தந்து செய்யும் அந்த மகத்தான தியாகமும்..
இந்தக் காட்சிகளில் எல்லாம் மனோரமாவின் நடிப்பில் எத்தனை சிறப்பு பொங்கி வழிகிறது என்பதை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டியதுதான்.
‘கல்விதான் பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கைக்கு அஸ்திவாரம். அதுதான் அவர்களை உயர்த்தும்” என்பதை படித்தவர்களை விடவும் படிக்காத தாய்மார்கள்தான் நன்கு உணர்ந்துள்ளார்கள். பாமரத்தாய்களின் அப்படியொரு பிரதிநிதிதான் ‘பொன்னம்மா’. மகனின் உயர்கல்விக்கான பணத்திற்காக தன் உயிரையே தியாகம் செய்யும் மகத்தான பாத்திரத்தில் வெளிப்படும் மனோரமாவின் நடிப்பின் வழியாக ஒவ்வொருவரும் தங்களின் அம்மாவைக் காண்பார்கள் என்பது உறுதி.