மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (81)  முகநூல்
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (81) |மயில்வாகனின் பாசிட்டிவ்வான பிளாக்மெயில்!

இந்த வாரம் ‘ மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘' டிராகன் ” திரைப்படத்தில் மிஷ்கின் ஏற்று நடித்திருந்த ‘ மயில்வாகனம் ’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

இந்த வார ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் சமீபத்தில் வெளியான திரைப்படத்திலிருந்து சுடச்சுட ஒரு கேரக்டரைப் பற்றி பார்க்கப் போகிறோம்.  ‘டிராகன்’ படத்தின் ‘மயில்வாகனன்’ காரெக்டர்.

பொதுவாக தமிழ் சினிமாவில் ஆசிரியர்கள் என்றாலே மலினமாகத்தான் சித்திரிப்பார்கள். அதிலும் தமிழாசிரியர் என்றால் கேட்கவே வேண்டாம். மாணவர்கள் கண்டபடி கிண்டலடிப்பதாக ஏக வசனத்தில் அவமரியாதைகள் கிடைக்கும். இளம் பார்வையாளர்களின் மனங்களை குஷிப்படுத்துவதற்காக ஆசிரியர்களை கேலிப்பொருளாக சித்தரிக்கும் வழக்கம் தமிழ் சினிமாவில் நெடுங்காலமாக நிகழ்ந்து வருகிறது. சில அரிதான இயக்குநர்கள்தான், ஆசிரியர்களை கம்பீரமாகவும் கண்ணியமாகவும் சித்திரித்திருக்கிறார்கள்.

அப்படியொரு படம்தான் டிராகன். அப்படியொரு பாத்திரம்தான் ‘மயில்வாகனன்’. இந்தப் பாத்திரத்தில் மிஷ்கின் சிறப்பாக நடித்திருக்கிறார். 

மிஷ்கின் என்னும் சுவாரசியமான ஆளுமை

இயக்குநர் மற்றும் நடிகர் என்பதைத் தாண்டி மிஷ்கினின் தனிப்பட்ட ஆளுமையே சுவாரசியமானது. அவர் மேடைகளில் அமர்த்தலாகப் பேசும் விதம், கறுப்புக் கண்ணாடி அணிந்தபடி மேடையில்  தலையைக் குனிந்து அமர்ந்திருக்கும் விதம், நோ்காணல்களில் ஒரு சம்பவத்தை விவரிக்கும் விதம் போன்றவற்றில் ஒரு சிறந்த நாடகத்தன்மையைக் காண முடிகிறது. 

இயக்குநர்கள் ஒரு படைப்பை ஆக்குபவர்கள். நடிகர் என்னும் பிம்பத்தின் வழியாக வெளிப்படுபவர்கள் இவர்களே. அவர்கள்தான் நடிகர்களுக்கு ஒரு காட்சியின் தன்மையை விளக்கி அதில் எவ்வாறு நடிப்பு வெளிப்பட வேண்டும் என்று கற்றுத் தருபவர்கள். எனில் அவர்களிடம் சிறந்த நடிப்புத்தன்மை உறைந்திருப்பதில் ஆச்சரியமில்லை. இந்த நோக்கில் இயக்குநர்களாக இருந்து நடிகர் அவதாரம் எடுத்தவர்களின் பட்டியல் பெரியது. இதில் மிஷ்கினும் இணைந்ததில் ஆச்சரியமில்லை. 

ஆசிரியர் பாத்திரம் என்பதற்காக மிஷ்கின் அதிகம் மெனக்கெடவில்லை. அவருடைய அசலான ஆளுமை, உடல்மொழி போன்றவற்றையே ‘மயில்வாகனின்’ மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்று யூகிக்கத் தோன்றுகிறது. படம் முழுவதும் ஏறத்தாழ ஒரே மீட்டரில் கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒரு நல்லாசிரியரின் உன்னதமான பிம்பம்

மயில்வாகனன் எப்படிப்பட்டவர்? நிச்சயமாக ஒரு நல்லாசிரியர். நன்றாகப் படிக்கும் மாணவர்களை மேலும் ஊக்கப்படுத்தி அவர்களையே முன்னுதாரணமாகக் கொண்டு பாராட்டும் ஆசிரியர்கள் அதிகம். அதுதான் நடைமுறையாகவும் இருக்கிறது. மாணவர்கள் அடையும் வெற்றிகள்  ஆசிரியர்களும் அதில் பங்கு கொண்டு பெருமிதம் அடைவார்கள். 

இதன் எதிர்முனையில் நன்றாகப் படிக்காத மாணவர்கள் ஆசிரியர்களால் வகுப்பில் கிண்டலடிக்கப்படுவார்கள்; புறக்கணிக்கப்படுவார்கள். இந்தக் கிண்டல் மற்றும் புறக்கணிப்பு காரணமாக இவர்கள் ஒன்று தாழ்வு மனப்பான்மையில் இன்னமும் பின்னால் சென்ற படிக்க முடியாதவர்களாக மாறுவார்கள் அல்லது தனது பொறுக்கித்தனங்களின் மூலம் இந்த பின்னடைவை கடந்து வர முயல்வார்கள்.

மாணவர்களை ஆசிரியர்கள் கையாளும் பாணி பொதுவாக இப்படி என்றாலும் ஒரு நல்லாசிரியர் இப்படிச் செய்யவே மாட்டார். நன்றாகப் படிக்கும் மாணவர்களை விடவும் படிக்காத மாணவர்களுக்கே முக்கியத்துவம் தருவார். பலமாகவும் அறிவாகவும் இருக்கும் பிள்ளையை விட, பலவீனமாகவும் முட்டாளாகவும் இருக்கும் பிள்ளையின் மீது தாயின் அன்பு அதிகமாக இருக்கும். பலமான பிள்ளை எப்படியும் பிழைத்துக் கொள்ளும். பலவீனமான பிள்ளைக்குத்தான் அதிகமான ஆதரவும் அரவணைப்பும் தேவை என்கிற தன்னிச்சையான தாய்மையுணர்வு இது. இதையேதான் நல்லாசிரியர்களும் பின்பற்றுவார்கள். 

வெளியே ஆங்ரி சிம்பல், உள்ளுக்குள் லவ் சிம்பல்

‘டிராகன்’ படத்தின் மயில்வாகனனும் அப்படியொரு தாய்மையுணர்வு படைத்தவர். வெளியே ஆங்ரி சிம்பலை நிறைய காட்டினாலும் உள்ளுக்குள் லவ் சிம்பலை கணிசமாக வைத்திருக்கும் வித்தியாசமான எமோஜி. 

ஏஜிஎஸ் இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் மயில்வாகனன். புதிய ஆண்டில், புதிய பேட்ஜில் சேரும் மாணவர்களுக்கு, அதே கல்லூரியில் சிறப்பாகப் படித்து வெளியேறியவர்களைத்தான் முன்னுதாரணமாகக் காட்டுவது வழக்கம். ஆனால் அப்படியொரு தருணத்தில் மயில்வாகனன் உதாரணமாக காட்ட விரும்புவது தோற்றுப் போன மாணவனை. 

கல்லூரியின் ‘freshers day’. அதற்காக காரில் வந்து கொண்டிருக்கிற முதல்வருக்கு அவருடைய மகளிடமிருந்து அழைப்பு. ‘சொல்லுடா.. செல்லக்குட்டி’.. என்று அவர் அழைப்பை ஏற்பதில் இருந்து பாசம் தெரிகிறது. படிப்பதற்கு சிரமமாக இருக்கிற AI தொடர்பான கல்வியில் சோ்த்து விட்டதால் மகள் சிணுங்க.. ‘அதாண்டா செல்லம்.. இனிமே ப்யூச்சர்’ என்று கன்வின்ஸ் செய்கிறார் மயில்வாகனன். 

ஒரு மாணவனுக்கு  உள்ளார்ந்த ஆர்வமும்  தன்னிச்சையான  திறமையும் எதில் இருக்கிறதோ, அது தொடர்பானதையே உயர்கல்வியில் தேர்ந்தெடுப்பது சரியான அணுகுமுறை. ஆனால் இளம் பருவத்தில் இருக்கிற மாணவர்கள் பலருக்கு தன் எதிர்கால கனவு குறித்த உறுதியான பாதையை அறியத் தெரியவில்லை. இதுவா அதுவா என்று குழம்பித் தவிக்கிறார்கள். அப்போதைய காலக்கட்டத்தில் எது ஃபேஷனோ அதை நோக்கி படையெடுக்கிறார்கள். இந்த நிலையில் குழம்பித் தவிக்கும் மாணவனுக்கு சரியான பாதையை காட்டுகிற - தீர்மானிப்பது அல்ல - கடமை பெற்றோருக்கு இருக்கிறது. அப்படியொரு பெற்றோராக AI-தான் எதிர்காலம் என்று மகளுக்கு வழிகாட்டும் தந்தையாக மயில்வாகனன் நமக்கு அறிமுகமாகிறார். 

ராகவன் - மோசமான மாணவனுக்கான முன்னுதாரணம்

மாணவர்களிடம் தன் உரையைத் துவங்குகிற முதல்வர் “பொதுவா மத்த காலேஜ்ல பொண்ணுங்களும் பையன்களும் பேசிக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. இங்க அப்படியில்ல. நீங்க பேசிக்கலாம். பழகலாம். ஏன். லவ் கூட பண்ணலாம். கல்யாணம் கூட பண்ணிக்கலாம்” என்றதும் மாணவர்கள் உற்சாகமாக கூச்சலிடுகிறார்கள். “I believe college is not just a place to build your career. It’s also build your friendship and healthy relationship” என்று சாெல்வதின் மூலம் வித்தியாசமான முதல்வராக காணப்படுகிறார் மயில்வாகனன். இந்தக் காட்சியில் மிஷ்கினின் உடல்மொழியைக் காண்பது சுவாரசியமாக இருக்கிறது. 

“இந்தக் காலேஜிலிருந்து வெளியே போன மிகப் பெரிய தோல்வியை உங்களுக்கு முன்னுதாரணமாக காட்ட விரும்புகிறேன். அவனைப் போல் யாரும் ஆகி விடக்கூடாது என்பதுதான் நோக்கம்” என்று முழங்குகிற மயில்வாகனன், D.ராகவன் என்கிற ‘டிராகன்’ என்கிற அடைமொழியில் சுட்டப்படுகிற மாணவனின் புகைப்படத்தைக் காட்டுகிறார். 

ராகவன் என்கிற அந்த மாணவன் ப்ளஸ் டூவில் 96 சதவீத தோ்ச்சி பெற்ற நல்ல மாணவன்தான். ஆனால் சமர்த்துப் பிள்ளையாக இருந்தால் பெண்களின் காதல் கிடைக்கவில்லையென்கிற காரணத்திற்காக, கல்லூரி வாழ்க்கையில் அராத்தாக மாறியவன். ‘Rugged boy’களைத்தான் இளம் பெண்களுக்கு பிடிக்கிறது என்கிற கான்செப்ட். படிப்பைக் கூட பின்னால் தள்ளி விட்டு கெத்துதான் முக்கியம் என்று திரிந்து 48 அரியர்ஸூடன் ஐடி கார்டை தூக்கிப் போட்ட கல்லுரியை விட்டு வெளியேறுகிறான். 

வெற்றியும் தோல்வியுமான கலைடாஸ்கோப் வாழ்க்கை

“ஃபர்ஸ்ட் டைம்.. ஒருத்தன் ஃபெயிலரை நோக்கி நடந்து போறதை என் கண்ணால பார்த்தேன்” என்று இந்தக் காட்சியை விவரிக்கிறார் மயில்வாகனன். “அப்புறம் அவன் என்ன ஆனான்?” என்று துடுக்குத்தனமாக ஒரு மாணவன் கேட்க “அதுவா என் வேலை.. அவன் என்ன அமொிக்காவுலயா இருக்கப் போறான்.. தெருவுல எங்காச்சும் சுத்திட்டிருப்பான்” என்று எரிச்சலுடன் பதில் சொல்கிறார் மயில்வாகனன். 

ஆனால் அவர் சொல்கிற இரண்டுமே பின்னால் நடக்கிறது. ஆம், நண்பர்களின் தயவில் பஜனை செய்து கொண்டு உருப்படாமல் இருக்கிற ராகவன், தன்னை கழற்றி விட்டுப் போன காதலியை விட அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்கிற வெறி காரணமாக போலிச் சான்றிதழ் தந்து ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தில் சேர்கிறான். சீக்கிரமே அதற்கான கல்வியைக் கற்று பணியிடத்தில் மின்னல்வேக முன்னேற்றத்தில் அமொிக்கா செல்வதற்காக தோ்வாகிறான். 

விதி என்பது ராகவனையும் மயில்வாகனனையும் ஒரு சிகரெட் துண்டின் மூலம் சந்திக்க வைக்கிறது. கார் சிக்னலில் நிற்கும் போது ராகவன் ஊதி விட்டு அலட்சியமாக வீசியெறிகிற சிகரெட், பக்கத்து காரில் பயணிக்கும் மயில்வாகனின் மீது பட்டுச் சுட, ‘யார்ரா அவன்?’ என்று ஆத்திரத்துடன் பார்க்கும் மயில்வாகனன், ராகவனின் அந்தஸ்தைப் பார்த்து திகைத்துப் போகிறார். 

இவனுக்கு எப்படி இப்படியொரு யோகம் வந்தது என்கிற சந்தேகத்துடன் பின்தொடர்கிறார். ராகவனின் தற்போதைய வளர்ச்சி குறித்து அறிகிறார். ‘கங்கிராட்ஸ்’ என்று சர்காஸத்துடன் சொல்கிறார். இந்தக் காட்சி இருவிதமான கோணங்களில் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. 

மயில்வாகனின் பாசிட்டிவ்வான பிளாக்மெயில்

‘நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட்மாஸ்டர்டா’ என்கிற மாதிரி திடீரென வந்து நிற்கும் காலேஜ் பிரின்சிபலை பார்க்கும் ராகவன் திகைப்படைகிறான். தன்னுடைய இயல்பான பொய் சொல்லும் திறமை காரணமாக சமாளிக்க முயல்கிறான். ஆனால் எதுவும் செல்லுபடியாவதில்லை. அவனை கிடுக்கிப் பிடியால் வளைக்கிறார் மயில்வாகனன். 

வேறு வழியில்லாமல் காலில் விழும் ராகவன், “சார்.. இப்பத்தான் என் வாழ்க்கை சந்தோஷமா போகுது. பழைய பகையை வெச்சிக்கிட்டு என்னை அம்பலப்படுத்திடாதீங்க” என்று திருட்டுக் கெஞ்சு கெஞ்சுகிறான். கல்லூரியில் தன்னை அவமானப்படுத்தி விட்டுச் சென்ற ராகவனைப் பழிவாங்குவதற்கு மயில்வாகனனுக்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். சராசரி நபராக இருந்தால் அதைத்தான் செய்திருப்பார். 

ஆனால் மயில்வாகனன் ஒரு நல்லாசிரியர் என்பதால் இன்னொரு வாய்ப்பைத் தருகிறார். “சரி.. உன்னைக் காட்டிக் கொடுக்க மாட்டேன். ஆனால் நன்றாகப் படித்து தோ்ச்சி பெற்று வேலை கிடைக்காமல் லோல் பட்டுக் கொண்டிருக்கும் ஒரு நல்ல மாணவனின் இடத்தில் நீ அமர்ந்திருக்கிறாய். நீ  சொன்ன பொய்யை மெய்யாக்கு. 48 அரியர்ஸையும் கிளியர் செய். டிகிரிதான் ஒரு மாணவனின் ஃபவுண்டேஷன். அஸ்திவாரம் இல்லாத எந்தவொரு கட்டிடமும் சரிந்து விடும்” என்று சொல்லி விட்டு ‘ஐ மிஸ் யூ மேன்’ என்று முத்தம் தந்து விட்டுச் செல்லும் காட்சியில் மிஷ்கினின் நடிப்பில் அப்படியொரு நக்கலும் கருணையும் கலந்து வழிகிறது. 

இது பிளாக்மெயிலா என்றால் பிளாக்மெயில்தான். ஆனால் இந்த மிரட்டலுக்குப் பின்னால் ராகவனின் மீதான அன்புதான் தெரிகிறது. ஒருவனின் எதிர்காலத்தைக் குலைத்து விடக்கூடாது என்கிற கவனத்துடன் செயல்படுகிற மயில்வாகனன், அதே சமயத்தில் அவன் செய்த தவறையும் சரிசெய்து கொள்வதற்கான சந்தர்ப்பத்தை உருவாக்கித் தருகிறார். 

ராகவனின் ரோலர்கோஸ்டர் வாழ்க்கை

தான் சொன்ன பொய், தவறு, மோசடி போன்வற்றில் தானே சிக்கித் தவிக்கிறான் ராகவன். ஆப்புக்குள் சிக்கிக் கொண்ட குரங்கு போன்ற கதை. மயில்வாகனனை பயங்கரமாக வெறுத்தாலும், வெளியேற விரும்பினாலும் அங்கிருந்து நகர முடியாத சூழல். “என்னை கெட்ட வார்த்தைல திட்டணும் போல இருக்கா.. உண்மையை ஒத்துக்கோ. 48 பேப்பரையும் எழுதி பாஸ் பண்ணு. அப்புறம் வந்து திட்டு. வாங்கிக்கறேன்” என்று சவால் விடுவது போல சொல்கிறார் மயில்வாகனன். 

மூன்றே மாதம் என்கிற குறுகிய இடைவெளியில் தன்னுடைய கல்விப் பாக்கியை தீர்த்து மகிழ்ச்சியுடன் வருகிற ராகவன், தன் திருமணப் பத்திரிகையை மயில்வாகனிடம் தருகிறான். ‘பயபுள்ள சொன்ன செஞ்சிக் காட்டிட்டானே’ என்று அவருக்கும் உள்ளூற திருப்தி வருகிறது. 

ஆனால் இன்னுமொரு டிவிஸ்டாக, இந்த வெற்றியிலும் ராகவனால் மோசடி செய்யாமல் இருக்க முடியவில்லை. அப்படியொரு சூழல். தன் மோசடி காரணமாக, நன்றாகப் படிக்கும் இன்னொரு மாணவனின் எதிர்காலம் பறிபோகவிருப்பதை அறியும் ராகவன், உண்மையை பொதுவில் சொல்லி தன்னுடைய அத்தனை அந்தஸ்துகளையும் இழக்கிறான். 

மறுபடியும் ஜீரோ என்கிற நிலைமை. என்றாலும் ஆசுவாசமாக உணர்கிற ராகவன், உணவு கொண்டு செல்லும் வேலையைச் செய்து கொண்டே கல்வியைத் தொடர்கிறான். 

ஆசிரியர் - மாணவன் என்னும் உன்னதமான உறவு

“மை டியர் ஸ்டூடண்ஸ்.. நாம எப்பவும் வெற்றியை நோக்கியே ஓடறோம். சமயங்கள்ல தோத்துடறோம். ஆனா அப்படியே உக்காந்துடாம திரும்பவும் எழுந்து ஓடறான் பார். அவன்தான் உண்மையான வெற்றியாளன்” என்று ராகவனின் கதையை இந்த முறை பாசிட்டிவ் உதாரணமாக காட்டுகிறார் மயில்வாகனன்.

ராகவனை ஒரு ஃபுட் டெலிவரி பாயாக, மயில்வாகனன் மீண்டும் சந்திக்கும் காட்சியில் மிஷ்கினின் நடிப்பு அருமையாக இருக்கிறது. படத்தின் கட்டக்கடேசியில் வரும் அந்த டிவிஸ்ட் ஒரு இனிமையான கவிதை. 

டிராகன் திரைப்படத்தில் மிஷ்கினின் கேரக்டரைக் கவனித்தால், ஒரு கடுமையான கல்லூரி முதல்வர் பாத்திரம் போல் தோற்றமளித்தாலும், தோல்வியின் வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிற ஒரு மாணவனை எப்படியாவது திசை திருப்பி நல்ல வழிக்கு நகர்த்தி விட மாட்டோமோ என்கிற தவிப்பு இருந்து கொண்டே இருப்பதைக் கவனிக்கலாம். மயில்வாகனன் என்கிற பாத்திரத்தின் மூலம் ஒரு நல்லாசிரியரின் சித்திரத்தை தனது அருமையான நடிப்பால் உருவாக்கியிருக்கிறார் மிஷ்கின்.