ஷெல்லி கிஷோர் முகநூல்
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் (76): சகித்துக் கொண்டு வாழும் ‘தாயின்’ பாத்திரம்’

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள்’ தொடரில் ‘’தங்கமீன்கள்” திரைப்படத்தில் ஷெல்லி கிஷோர் ஏற்று நடித்திருந்த ‘வடிவு’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

மகேந்திரன் இயக்கிய உதிரிப்பூக்கள் திரைப்படத்தின் பிரதான பாத்திரங்களுள் ஒன்று, லஷ்மி. மனரீதியாக துன்புறுத்தும் கணவனின் கொடுமைகளை, தனது இரண்டு பிள்ளைகளுக்காக சகித்துக் கொண்டு வாழும் ‘தாயின்’ பாத்திரம். இந்த கேரக்டரில் அஸ்வினி் பிரமாதமாக நடித்திருந்தார். 

“என்ன சார்.. இவங்களைப் பார்த்தாலே அழுது வடியுது.. இவங்களா படத்துக்கு ஹீரோயின்?’ என்கிற மாதிரி பலரும் அஸ்வினியின் சோகமான தோற்றத்தை வைத்து கேள்விகள் கேட்டாலும் இந்தப் பாத்திரத்திற்கு இவர்தான் பொருத்தம் என்று மகேந்திரனின் உள்ளுணர்வு சொல்லியதால் தன்னுடைய தேர்வில் அவர் பிடிவாதமாக இருந்தார். அது சரியான முடிவாக அமைந்தது.  துயரத்தின் சாயல் படிந்திருந்த அஸ்வினியின் தோற்றமும் நடிப்பும் உதிரிப்பூக்கள் படத்திற்கு ஒரு பெரிய பிளஸ் பாயிண்டாக இருந்தது என்பதை பலரும் ஒப்புக் கொள்வார்கள்.

உதிரிப்பூக்களுக்குப் பிறகு நெடும்காலமாக அப்படியொரு இயல்பான முகம் என் கண்ணில் படவேயில்லை. பெரும்பாலும் சினிமாவிற்கென்று தயாரிக்கப்பட்ட ஒப்பனை முகங்களாகத்தான் கண்ணில் பட்டன. நீண்ட காலம் கழித்து இன்னொரு ‘அஸ்வினி’யை தங்க மீன்கள் திரைப்படத்தில் பார்த்தேன். அதே துயரத்தின் சாயல்.

தங்க மீன்கள் திரைப்படத்தில் ‘வடிவு’ என்கிற பாத்திரத்தை ஏற்றிருந்தவர் ஷெல்லி கிஷோர். மலையாளத் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். குங்குமப்பூவு’ என்னும் டிவி சீரியல் ஷெல்லி கிஷோருக்கு பெரும் புகழை ஈட்டித் தந்தது. 

பிறகு ‘கேரளா கஃபே’ என்னும் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். மிகச் சொற்பமான படங்களில் மட்டுமே நடித்திருக்கும் ஷெல்லி கிஷோரின் முதல் தமிழ் திரைப்படம் ‘தங்கமீன்கள்’.  மகேந்திரனைப் போலவே இயக்குநர் ராமும், துயரத்தின் சாயல் படிந்திருக்கும் இவரது தோற்றத்தின் காரணமாக ஈர்க்கப்பட்டிருக்கலாம். 

தங்க மீன்கள் ‘வடிவு’ பாத்திரம் எத்தகையது? 

குடும்பம் என்னும் நிறுவனத்திற்குள் மனப்புழுக்கத்துடன்  தினம் தினம் தவிக்கும் ஏராளமான பெண்களின் பிரதிநிதிதான் வடிவு. சம்பாதிக்கத் தெரிந்த இதர ஆண்களைப் போல, இவளது கணவன் கல்யாணிக்கு சாமர்த்தியமாக பொருளீட்டத் தெரியவில்லை. இவர்களின் ஒரே பெண் குழந்தை செல்லம்மா.  ஒரு பாசமிகு தகப்பனாக மகளின் மீது அளவிற்கு அதிகமான பிரியத்தை வாரிக் கொட்டுகிறான் கல்யாணி. செல்லம்மாதான் கல்யாணியின் உலகம். ஆனால் இந்த அதீதமான பிரியம்தான் வடிவுக்கு ஒருவகையில் பல இன்னல்களைத் தேடித் தருகிறதோ?! 

கல்யாணிக்கும் வடிவிற்கும் நடந்தது காதல் திருமணம். ‘வா’ என்று காதலன் சொன்ன ஒரு வார்த்தையை நம்பி 18 வயதிலேயே கல்யாணியை கைப்பிடித்தவள் வடிவு. ஆனால் பொருளியல் பின்னடைவு காரணமாக வடிவின் வாழக்கை வடிவாக அமையவில்லை. அரசுப் பள்ளியில் ஹெட்மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்று வசதியாக வாழ்கிற மாமனாரின் வீட்டில் ஒண்டிக் கொண்டிருக்கிற வாழ்க்கைதான் வடிவிற்கு வாய்த்திருக்கிறது. 

பொருளீட்டத் தெரியாத கணவன் காரணமாக தினம் தினம் வீட்டில் பிரச்சினை. மகன் இப்படி உருப்படாமல் திரிகிறானே என்கிற கோபத்தில் கரித்துக் கொட்டுகிறார், கல்யாணியின் அப்பா. அந்தக் கோபம் கூட மகன் மீதுள்ள பாசத்தில் விளைவதுதான். ‘அவன் நல்லவங்க’ என்று கல்யாணியின் அம்மா குமுறி அழுது ஆதரவு தரும் போது ‘அவன் ரொம்ப நல்லவன்டி. வெளில போய் கொஞ்சம் கெட்டவனாத்தான் வரட்டுமே’ என்று கண்கலங்குகிறார் அப்பா. 

மருமகள்கள் எதிர்கொள்ளும் துயரத்தின் ஒரு துளி - வடிவு

ஒரு மாமியாருக்கேயுரிய அதிகாரத்தோடு உரையாடலில் ஊசியை செருகுபவரை தினம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினை மருமகள் வடிவிற்கு. இதையெல்லாம் கூட வடிவால் தாங்கிக் கொள்ள முடியும். ஆனால் ‘மந்த புத்தியுள்ளவள்’ என்று மகள் செல்லம்மாவை யாராவது சொல்வதுதான் தாங்கிக் கொள்ள முடியாத துயரமாக இருக்கிறது. 

சம்பாதிக்கத் தெரியாமல், மகளை செல்லம் கொஞ்சுவதே வாழ்க்கை என்றிருக்கும் கணவன் ஒரு பக்கம்.  ‘ஏண்டா இப்படி இருக்கே?” என்று கணவனை திட்டித் தீர்க்கும் மாமனார் இன்னொரு பக்கம். பேத்தி மீது பாசம் இருந்தாலும் கடுமையைக் காட்டும் மாமியார் இன்னொரு பக்கம்…  என்று புழுக்கத்தை ஏற்படுத்தும் அந்த வீட்டின் சூழலில் இருந்து விடபட முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறாள் வடிவு. 

இந்த அனைத்துப் பாத்திரங்களையும் கருப்பு வெள்ளையாக அல்லாமல் அவரவர்களுக்கான நியாயங்களுடனும் உணர்வுப் போராட்டங்களுடனும் அடிப்படையான பாசங்களுடனும் மிகத் திறமையாக வடிவமைத்திருக்கிறார் இயக்குநர் ராம். 

செல்லம்மாவின் பிரத்யேகமான குழந்தைகள் உலகம் 

தங்கமீன்கள் பிரதானமாக குழந்தைகளின் உலகத்தை சித்திரித்திருக்கும் படம். கல்விக்கூடம் என்னும் நிறுவனத்தின் மீது விமர்சனத்தை எழுப்பியிருக்கும் படைப்பு. 

‘குயில் எங்கு கூடு கட்டும்?’ - செல்லம்மாவிடம் ஆசிரியை கேட்கும் கேள்வி இது. பள்ளிக் கடிகாரத்திற்குள் இருக்கும் குயில் பொம்மையை அப்போதுதான் பார்த்து விட்டு வந்திருக்கும் செல்லம்மா,  “ஸ்கூல் கிளாக்குல கூடு கட்டும் மிஸ்” என்று சொல்லி ஆசிரியையின் கண்டனத்திற்கும் சக பிள்ளைகளின் ஏளனத்திற்கும் ஆளாகிறாள். 

அன்றிரவு வீ்ட்டில் மகளுக்கும் தாய்க்கும் உரையாடல். குயில் கூடு கட்டும் இடத்தைப் பற்றி மகள் விசாரிக்க “நீ முதல்ல தூங்கு” என்று வடிவு  அதட்ட, “பதில் சொல்லும்மா.. தூங்கறேன்” என்று மகள் செல்லத்துடன் அடம்பிடிக்க, புன்னகையுடன் பதில் சொல்கிறாள் வடிவு. “அது வந்து. காக்கா மாதிரி பெரிய பெரிய பறவைங்க கூடு கட்டுமில்ல.. அங்க போய் தங்கிக்கும்”. 

அது குழந்தைக்கான பதில் மட்டுமில்லை. வடிவின் சொந்தக் கதையும் கூட. தன் குடும்பத்திற்கென்று ஒரு கூடு இல்லாமல் மாமனாரின் வீட்டில் ஒண்டியிருக்க நேரும் அவலத்தை மறைமுகமாக வெளிப்படுத்தும் சோகம். “எனக்குப் புரியலைம்மா” என்று செல்லம்மா விழிக்க “இது யாரோட வீடு” என்று வடிவு கேட்க “இது நம்ம வீடு” என்று குழந்தை வெள்ளந்தியாக பதில் சொல்கிறது. “இல்ல.. இது தாத்தாவோட வீடு. நாமதான் இங்க தங்கியிருக்கோம்” என்று தன் மனப்புழுக்கத்தை குழந்தையிடம் தன்னிச்சையாக கசிய விடுகிறாள் வடிவு. 

“அப்படின்னா நீ பெரிய குயில்.. நான் சின்ன குயில்” என்று மகிழ்ச்சியுடன் கூவுகிற செல்லம்மா, திடீரென எழுந்து ‘அப்படின்னா தாத்தாதான் காக்காவா?” என்று துடுக்குத்தனமாக கேட்க, வடிவால் சிரிப்பை அடக்க  முடியவில்லை. 

மாமியார் என்னும் அதிகார பீடம்

இந்த உரையாடல் மாமியாரின் காதில் விழுந்து விடுகிறது. பிறகு என்ன நடக்கும்? அதேதான். மறைமுகமான குத்தல் வார்த்தைகளை வைத்து சுற்றி வளைத்து மருமகளிடம் விசாரணை நடக்கிறது. “அவனுக்கு ரெண்டு மாசமா சம்பளம் வரலையே.. என்னன்னு கேட்டியா?” என்று மாமியார் தன் குறுக்கு விசாரணையை ஆரம்பிக்கிறார்.

“அவரு எங்க பதில் சொல்றாரு அத்தே.. உன் வேலையைப் பாருன்னு எரிஞ்சு விழறாரு” என்று யதார்த்தமாக வடிவு பதில் சொல்ல “நல்ல சாமர்த்தியமா பேச கத்துக்கிட்டே வடிவு. உங்க வேலையைப் பாருங்கன்னு எனக்கு சொல்றியா?” என்று மாமியார் குதர்க்கமாக கேட்க அன்றைய நாளும் வடிவிற்கு சோதனை நாளாக அமைகிறது. 

“நீ ஊருக்கு திருவிழாவிற்கு போனப்ப சம்பளம் செலவாயிடுச்சுன்னு நேரடியா சொல்ல வேண்டியதுதானே” என்கிறாள் மாமியார். தன் பிள்ளை சம்பாதிப்பதை அப்படியே அள்ளிச் சென்று மருமகள் பிறந்த வீட்டில் தந்து விடுகிறாள் என்று ஒவ்வொரு மாமியாரும் செய்யும் கொடூரமான கற்பனைக்கு விதிவிலக்கு இல்லாமல் வடிவின் மாமியாரும் அப்படியே இருக்கிறார். 

நடந்த சம்பவத்தின் மனப் புழுக்கம் தாங்காமல், வீட்டிற்கு சற்று தூரம் தள்ளி கணவனின் வரவிற்காக இரவின் தனிமையில் காத்திருக்கிறாள் வடிவு. ஒரு சோகச் சித்திரம் போல வடிவு உறைந்து அமர்ந்திருக்கும் காட்சி மனதை நெகிழ வைக்கிறது. பாத்திரங்களுக்கு பாலீஷ் போடும், இரண்டு மாதங்களாக சம்பளம் வராத வேலையில் இருக்கும் கணவன் சோர்வுடன் சைக்கிளில் வீடு திரும்புகிறான். 

தண்டவாளங்களுக்குப் பின்னால் பகிரப்படும் சோகம்

“என்னை எங்காச்சும் வெளில கூட்டிட்டுப் போறீங்களா…? - வடிவு கேட்கும் இந்தச் சாதாரண கேள்விக்குப் பின்னால், ‘வீட்டிற்குள் புழுக்கம் தாங்கவில்லை’ என்கிற ஓலம் மௌனமாக ஒலிக்கிறது. அந்தக் கதறலின் அழுத்தம் புரிந்தோ அல்லது புரியாமலோ “இந்த நேரத்துல எங்க போறது?” என்று கணவன் எரிச்சலுடன் கேட்க “விடுங்க. நானே போயிருக்கணும்” என்று எரிச்சலுடன் வீட்டுக்குத் திரும்புகிறாள் வடிவு. காட்சி துண்டிக்கப்படுகிறது. 

பின்னணியில் ரயில் ஓசை தடதடக்க, தண்டவாளங்களை சாட்சியாகக் கொண்டு வீட்டின் புழுக்கத்தை கணவனிடம் பகிர்ந்து கொள்கிறாள் வடிவு. வேறு யாரிடம்தான் அவள் சொல்ல முடியும்? “சரி விடு.. நான் சரியா சம்பாதிக்காததுதான் பிரச்சினை. உன் மேல ஒரு பிரச்சினையும் இல்ல” என்று ஆறுதல் சொல்கிறான் கணவன். 

இருவரும் வீடு திரும்புகிறார்கள். “ஏங்க.. நான் முன்னாடி போறேன்.. நீங்க கொஞ்ச நேரம் கழிச்சு வர்றீங்களா?” என்று வடிவு கேட்கிறாள். இது எதற்காக என்று ஒவ்வொரு மருமகளுக்கும் நன்கு தெரியும். “நம்ம ரெண்டு பேரையும் சேத்து பாத்தா நான் ஏதோ வத்தி வெச்சுட்டேன்னு அத்த நெனப்பாங்க” என்கிறாள் வடிவு. 

படத்தின் ஹைவோல்டேஜ் காட்சி

இன்னொரு காட்சியில் தகப்பனுக்கும் பிள்ளைக்கும் வாக்குவாதம் முட்டிக் கொள்ள, தன்மானவுணர்ச்சி பீறிட “வடிவு.. செல்லம்மாவ கூட்டிட்டு வா.. இங்க இருந்து போகலாம்” என்று கத்துகிறான் கல்யாணி. வடிவு கைகூப்பி கெஞ்சியும் கல்யாணியின் கோபம் அடங்குவதில்லை. “என்னை அவமானப்படுத்தாதே வடிவு” என்று வெடிக்கும் கல்யாணி “நீ வரலைன்னா என்ன.. என் பிள்ளையை கொடுடி” என்று பாய்ந்து வர, துரிதமாக அறைக்குள் சென்று கதவைச் சாத்திக் கொள்கிறாள் வடிவு. 

வெளியில் இருந்து கோபத்துடன் அறைக்கதவை கல்யாணி தட்டுகிறான். மூடிய அறைக்குள் வடிவு கதறியழ, “அப்பா கூப்பிடறார்லம்மா” என்று செல்லம்மா கதற.. இந்தப் படத்தின் ஹைவோல்டேஜ் காட்சிகளுள் இதுவும் ஒன்று. 

இன்னொரு காட்சி. “நீ திருடுனியா” என்று செல்லம்மாவை தாத்தா குறும்பாக விசாரிக்க “அப்படிச் சொல்லாதீங்க மாமா” என்று தன் மௌனத்தை உடைத்து வடிவு சீறும் காட்சியும் சூடான காட்சிதான்.

வடிவு பாத்திரத்தி்ல் அசத்தியிருக்கும் ஷெல்லி கிஷோர்

மனதிற்குப் பிடித்தவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவள்தான் வடிவு. ஆனால் அந்தப் பகற்கனவுகள் முடிந்து யதார்த்தத்தின் வெப்பம் சுட ஆரம்பிக்கும் போது தவித்துப் போகிறாள். 

ஒரு பக்கம் சம்பாதிக்கத் தெரியாத கணவன், இன்னொரு பக்கம் ‘மந்த புத்தியுள்ளவள்’ என்று ஊரால் பரிகசிக்கப்படும் மகள், இதற்கிடையில் மாமனார், மாமியாருடன் மௌனப் போராட்டம் என்று ஒரு மருமகளின் மனரீதியிலான அவஸ்தைகளை தன்னுடைய நடிப்பால் அபாரமாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஷெல்லி கிஷோர்.