நினைத்தாலே இனிக்கும் ரஜினி PT
சினிமா

மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் | துள்ளலான நடிப்பில் இதயத்தை கவர்ந்த ‘தீபக்’ ரஜினிகாந்த்!

இந்த வாரம் ‘மறக்க முடியாத துணைக் கதாபாத்திரங்கள் தொடரில் ‘நினைத்தாலே இனிக்கும்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஏற்று நடித்திருந்த ‘தீபக்’ கதாபாத்திரத்தை பார்க்கப்போகிறோம்.

சுரேஷ் கண்ணன்

(தொடரின் முந்தைய அத்தியாயங்களை, இங்கே க்ளிக் செய்து வாசிக்கலாம்...)

தீபக் - ரஜினிகாந்த் - நினைத்தாலே இனிக்கும்

ரஜினிகாந்த்தின் பிறந்த நாள் என்பதால் அவருடைய ஆரம்பக்கட்டத்தில் வந்த திரைப்படங்களில் இருந்து ஒன்றைத் தோ்ந்தெடுத்து அவர் ஏற்ற ஒரு சுவாரசியமான துணைக் கதாபாத்திரம் பற்றி பார்ப்போம்.

கமல் - ரஜினி

ஹாலிவுட்டில் ‘மியூசிக்கல் திரைப்படங்கள்’ என்று பாடல் மற்றும் இசையை முதன்மைப்படுத்தி ஒரு தனியான ஜானர் இருக்கும். தமிழ் சினிமா என்பதே பொதுவாக பாடல்களின் கலவையுடன் உருவாவது என்றாலும் இப்படியொரு வகையில் பிரத்யேகமான அடையாளத்துடன் வெளிவந்த படம் ‘நினைத்தாலே இனிக்கும்’. இந்தப் படத்தின் ரகளையான பாடல்கள் அந்தச் சமயத்தில் ரசிகர்களால் வெகுவாக கொண்டாடப்பட்டன. திரையரங்கமே திருவிழாக் கோலத்துடன் இருந்தது.

ரஜினி - நினைத்தாலே இனிக்கும்

இந்தப் படத்தின் ஹீரோ கமல்ஹாசன் என்றாலும் துணைப் பாத்திரமாக வந்த ரஜினிகாந்திற்கு நிறைய காட்சிகளை தந்து அழகு பார்த்தார் இயக்குநர் பாலசந்தர். இவரால்தான் ரஜினி அறிமுகப்படுத்தப்பட்டு பட்டை தீட்டப்பட்டார் என்பது எல்லோருக்கும் தெரியும்.

‘நகைச்சுவை’ ரஜினி வெளிப்பட்ட ஆரம்பத் திரைப்படம்

துவக்கப்படங்களில் ரஜினியை வில்லனாக பயன்படுத்திய பாலசந்தர், ‘நினைத்தாலே இனிக்கும்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட பாத்திரத்தில் ஜாலியான இளைஞனாக பயன்படுத்தினார். அந்த வகையில் ‘தில்லு முல்லு’ திரைப்படத்திற்கான முன்னோட்டம் என்று இந்தப் படத்தை சொல்லலாம். ரஜினிக்குள் இருந்த நகைச்சுவை நடிகனை அழுத்தமாக அடையாளம் காட்டிய படம் இது.

ரஜினி

சந்துருவின் (கமல்) இசைக்குழு மிகப் பிரபலமானது. இவர்களின் நிகழ்ச்சிக்கு இளைஞர்கள் ஏராளமாக வருவார்கள். இந்தக் குழுவில் அனைத்து வாத்தியங்களையும் வாசிக்கக்கூடிய தகுதி இருக்கிற ஓர் இளைஞன். அது தீபக். (ரஜினிகாந்த்). கருப்பு நிறம், குறுந்தாடி, அலட்சியமாக சீவப்பட்ட தலைமுடி, ஜீன்ஸ் பேண்ட்டில் இன் செய்யப்பட்ட முழுக்கைச் சட்டை என்று ஒப்பனை அதிகமில்லாத இயல்பான தோற்றத்தில் இருந்தார் ரஜினி.

தனது இசைக் குழுவின் உறுப்பினர்களை பார்வையாளர்களிடம் சந்துரு அறிமுகப்படுத்தும் போது கிடாரை ஸ்டைலாக வாசித்துக் காட்டுவான் தீபக். “இவர் எங்க குழுவுல முக்கியமான பிளேயர். எங்க எல்லோருக்கும் பாடிகார்ட். என்ன கொஞ்சம் கைநீளம்.. திருடுவான். திருட்டுன்னா.. பேனா.. செயின்.. கர்ச்சீப்..” என்று சொல்லும் சந்துரு, தன் பாக்கெட்டில் கை விட்டுப் பார்க்க கைக்குட்டை இருக்காது. கிடாரின் பின்னிருந்து தீபக் அதை எடுத்துக் காட்ட பார்வையாளர்கள் சிரிப்பார்கள்.

ரஜினி

‘கிளப்ட்டோ மேனியா’ என்று சொல்லப்படுகிற சின்னச் சின்ன பொருட்களைச் சுடுகிற இச்சை கொண்ட பாத்திரத்தில் தீபக்கின் பாத்திரம் எழுதப்பட்டிருந்தது. அதைப் போலவே, அவ்வப்போது ‘சிவசம்போ’ என்று அடிக்கடி சொல்வதும் தீபக்கின் மேனரிசம் “அப்பப்ப எம்.எஸ்.விஸ்வநாதன் குரல்ல கூட பாடுவான்” என்று சந்துரு சொல்வது, பின்னர் வருகிற ‘சிவசம்போ’ பாடலுக்கான லீட் வசனம்.

‘சிவசம்போ’ - தீபக்கின் சிக்கலான காதல் டிராக்

சிங்கப்பூரில் இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக இந்த இசைக்குழு செல்லும். ஏர்போர்ட்டில் கிளியரன்ஸ் ரப்பர் ஸ்டாம்ப்பைக் கூட தீபக் சுட்டுவிடுவது ஜாலியான காட்சி. போலவே ஒரு சக பயணியிடம் “உங்களுக்கு குடிப்பழக்கம் இருக்குதுன்னு நெனக்கறேன். கையை நேரா வைங்க. நடுங்குதான்னு பார்க்கலாம்” என்று அவரது கவனத்தை திசைதிருப்பி விட்டு, அவரது டிக்கெட்டை ஜாலியாக சுட்டு விடுவான் தீபக்.

ரஜினி

ஹோட்டல் ரிசப்ஷனில் இருக்கும் அழகான இளம்பெண்ணை (கீதா) ‘மலாய் பெண்’ என்று நினைத்துக் கொண்டு “லட்டு மாதிரி இருக்காளேடா.. இந்த டியூட்டில இப்படியொரு பியூட்டியா.. இப்ப எனக்கு என்ன பண்ணனும் தெரியுமா.. நேராப் போயி.. இவங்க அப்பா அம்மாவைச் சந்திச்சு.. இப்படியொரு அழகுப் பதுமையை பெத்ததுக்காக பாராட்டணும்டா” என்று தன் நண்பனிடம் ஜொள் வடியச் சாெல்லிக் கொண்டிருக்கும் போது, அந்தப் பெண் தொலைபேசி உரையாடலில் இருந்து விலகி “அதுக்கு நீங்க காரைக்காலுக்குப் போகணும்” என்று தமிழில் சொல்ல தீபக் ஜொ்க் ஆகி தடுமாறி விழுவது ரகளையான காட்சி.

ரஜினி

“ஒரு நிமிஷம் இருடா.. மன்னிப்பு கேட்டுட்டு வரேன்” என்று நண்பனிடம் சொல்லும் தீபக், திரும்பும் போது அந்தப் பெண்ணின் கழுத்துச் சங்கிலியை சுட்டுக்கொண்டு வருவார். ஒரு நிகழ்ச்சியில் சந்துருவின் பாடலைக் கேட்பதற்காக ரசிகர்கள் காத்திருந்து பொறுமையிழந்து கத்துவார்கள். சந்துரு தனது காதலியைச் சந்திப்பதற்காக சென்று விடுவான். “ஏதாவது செய்ங்கய்யா..” என்று சபா செகரட்டரி தரும் நெருக்கடி காரணமாக ‘சிவசம்போ’ என்று முனகும் தீபக், பிறகு அதையே பல்லவியாக வைத்து பாடும் பாடல் கேட்கவே கொண்டாட்டமாக இருக்கும். உச்ச ஸ்தாயியில் எம்.எஸ்.வி. பாடியிருக்க, சிறப்பாக நடித்திருப்பார் ரஜினி.

‘டேப் சுந்தரி’யைத் தேடி ஒரு பயணம்

ஒருபக்கம் கமல்ஹாசனின் காதல் டிராக் சீரியஸாக போய்க் கொண்டிருக்க, இன்னொரு பக்கம் ரஜினியின் காதல் டிராக் காமெடியாக பயணிக்கும். ஒரு டேப்பில் அநாமதேயக் குரல், காதல் கடிதமாக கேசட் வடிவில் வரும். ‘அன்பரே.. உங்களை ஒருமுறை பார்த்தேன். பார்த்ததும் பரவசம் அடைந்தேன். பரம ரசிகையாகி விட்டேன். அதென்ன, இப்படியொரு பூகம்பத்தை என் இதயத்தில் ஏற்படுத்தி விட்டீர்கள். பொல்லாத போக்கிரி நீங்கள். நாட்டி பாய். உங்களை நேரில் சந்திக்க இதயம் துடிக்கிறது. என்னைக் கண்டுபிடிப்பீர்களா, நேரில் வருவீர்களா.. என்னை சந்தியுங்கள் பார்க்கலாம். இப்படிக்கு ஒரு துர்ப்பாக்கியவதி. என் விலாசம்.. &$#@%%(()&__%%!&)*&^%$^” என்று குரல் ஒலிக்கும். டேப்பின் கடைசிப் பகுதி மட்டும் புரியாமல் குழப்பமாக இருக்கும்.

ரஜினி

“இப்படித் தவிக்க விட்டுட்டாளே…” என்று தீபக் புலம்புவான். அந்த டேப்பின் குரலை வைத்துக் கொண்டு சிங்கப்பூர் முழுவதும் தேடுவான். மனம் திருந்தி, திருடிய செயினை ரிசப்னிஸ்ட் பெண்ணிடம் தருவதற்காக செல்லும் போது ‘டேப் சுந்தரி’ அவள்தான் என்று அறிந்து குதூகலம் அடைவான். ‘நம்ம ஊரு சிங்காரி, சிங்கப்பூரு வந்தாளாம்’ பாடலுக்கான லீட் காட்சி இது.

தனது படங்களில் நடிக்க வரும் நடிகர்களிடம் தனிப்பட்ட திறமையோ, மேனரிசமோ இருந்தால் அதை திரைப்படத்திலும் பயன்படுத்திக் கொள்வது பாலசந்தர் ஸ்டைல். அந்த வகையில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயினால் பிடிக்கும் ரஜினியின் பழக்கத்தை வைத்து ஒரு நகைச்சுவைக் காட்சியையே இந்தப் படத்தில் உருவாக்கி வி்ட்டார்.

‘பத்து முறை சிகரெட் தூக்கிப் போட்டு பிடிச்சா. டொயோட்டா கார் பரிசு’

பந்தயம் வைப்பதில் பைத்தியமாக இருக்கும் பூர்ணம் விஸ்வநாதன், தீபக்கிடம் ஒரு பந்தயம் வைப்பார். ‘நீ பத்து முறை தொடர்ந்து சிகரெட்டை தூக்கிப் போட்டு வாயில கரெக்டா பிடிச்சிட்டா.. என் டொயோட்டா கார் பரிசா தரேன். தோத்துப் போயிட்டா உன் சுண்டு விரலை கட் பண்ணி எடுத்துப்பேன்” என்று விளையாட்டும் வினையுமாக ஒரு பந்தயத்தை முன்வைப்பார்.

“டேய்.. டேய். சுண்டு விரல்தானே.. போனாப் போகுது.. நாலு விரலோட பொறந்ததா நெனச்சுக்கோ.. பந்தயத்துக்கு ஒத்துக்கடா… டொயோட்டா கார் கிடைக்கும்” என்று நண்பர்கள் ஆசை காட்டுவார்கள். பந்தயப் பைத்தியமும் கார் சாவியை கண் முன்னால் ஆட்டிக் கொண்டே இருப்பார்.

ரஜினி

தீபக்கிற்கு உள்ளூற நடுக்கம் இருந்தாலும் அசட்டுத் தன்னம்பிக்கை காரணமாக பந்தயத்திற்கு ஒப்புக் கொள்வான். ‘தட் ஈஸ் தி ஸ்பிரிட்’என்று சொல்லும் கிழவர், ஒரு பாட்டிலையும் கத்தியையும் எடுத்து வெளியே வைப்பார். “என்னதிது.? என்று நடுங்கிக் கொண்டே தீபக் கேட்க, ‘ஸ்பிரிட். விரல் வலிக்காம வெட்டறக்காக” என்று பயமுறுத்துவார்.

மிகவும் தன்னம்பிக்கையுடன் பந்தயத்தை ஆரம்பிக்கும் தீபக், ஐந்து, ஆறு எண்ணி்க்கையைத் தொடும் போது மெல்ல மெல்ல சுருதி குறைந்து பயத்தை வெளிப்படுத்தும் காட்சி சுவாரசியமானது. எப்படியும் ஜெயித்து விடுவான் என்கிற ஆவலில் நண்பர்கள் பார்த்துக் கொண்டிருக்க, ஒன்பது முறை சரியாகச் செய்து விடும் தீபக், பத்தாவது எண்ணிக்கையின் போது விரல் நடுங்க “எனக்கு சுண்டு விரல்தான் முக்கியம். நீங்களும் தோற்கலை.. நானும் ஜெயிக்கலை.. ஓகேவா?” என்று பயத்தில் புலம்ப, அதைக் கேட்டு கிழவர் வெடித்து சிரிப்பார்.

ரஜினியின் நகைச்சுவைக் குறும்புகள்

‘டேப் சுந்தரியை’ தேடி ஒரு பேரிளம் பெண்ணிடம் தீபக் மாட்டிக் கொள்வதும் நகைச்சுவையான காட்சி. நண்பர்கள் சதி செய்து அவனை மாட்டி விடுவார்கள். டேப்பில் வரும் விலாசம் ‘ரிவர்ஸ் டெக்னிக்கில்’ பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்று சிஙகப்பூரில் பணிபுரியும் சவுண்ட் இன்ஜினியர் சொல்ல (எஸ்.வி.சேகர்) அதன் மூலம் விசாலத்தைக் கண்டுபிடிக்கும் தீபக், அந்த வீட்டிற்குச் செல்வான். ஒரு வாக்கியம் பேசி விட்டு பின்குறிப்பாக ‘கபகப’வென்று சிரிக்கும் இளம்பெண்ணின் (ஜெயசுதா) விருந்தோம்பலில் மகிழ்வான். பிறகு தன்னை காரில் டிராப் செய்பவனை டிரைவர் என்று நினைத்துக் கொண்டு தீபக் எதையோ பேச, அவன்தான் இளம்பெண்ணின் கணவன் என்பதை அறிந்து மனம் உடைந்து போவான்.

ரஜினி

ரஜினியை ஆக்ஷன் நாயகனாகவும் ‘சூப்பர் ஸ்டார்’ என்கிற பிம்பத்துடன் மட்டுமே அறிந்திருக்கும் 2கே கிட்ஸ், அவர் ஆரம்பக் காலத்தில் சுவாரசியமாக நடித்திருந்த இந்த கேரக்டரையும் பார்க்கலாம். அநாமதேயப் பெண்ணைத் தேடித் துரத்தி சிக்கலில் மாட்டிக் காெள்ளும் குறும்புத்தனமான இளைஞனின் பாத்திரத்தை நகைச்சுவை பொங்க கையாண்டிருந்தார் ரஜினிகாந்த்.