நடிகை எமி ஜாக்சன் தனது காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் மதராசப்பட்டணம் படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். 1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
அதைத்தொடர்ந்து தாண்டவம், ஐ, தங்க மகன், தெறி, உள்ளிட்ட படங்களில் நடித்தார். இவர் கடைசியாக தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான 2.0 படத்தில் ரோபோவாக நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், இவர் தனது காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டதாக தெரிவித்துள்ளார். இந்த ஜோடி, கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள ஜாம்பியா நாட்டில் தற்போது புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடி வருகிறது. எமி ஜாக்சனின் காதலர் ஜார்ஜ், லண்டனில் தொழிலதிபராக இருக்கிறார். புதுவருடம் நேற்று பிறந்த நிலையில் எமி ஜாக்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தனக்கு முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பெரிய வைர மோதிரம் கையில் இருக்க, எமி ஜாக்சன் தன் காதலர் ஜார்ஜ் பனாயிட்டோவுடன் இருக்கும் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் “2019-ம் ஆண்டின் ஜனவரி முதல் நாள். நம்முடைய வாழ்க்கையில் சாகசம் தொடங்கியிருக்கிறது. நான் உன்னைக் காதலிக்கிறேன். இந்த உலகத்திலேயே மிக சந்தோஷமான பெண்ணாக என்னை மாற்றியதற்கு நன்றி” என இன்ஸ்டாகிராமில் அந்த புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார் எமி.