பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷ்யாம்’ படத்துக்கு, நடிகர் அமிதாப்பச்சன் கதை சொல்பராக, வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள, பான் இந்தியா திரைப்படம் ‘ராதே ஷ்யாம்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். பாக்கியஸ்ரீ, சச்சின் கெடேக்கர், ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி உட்பட பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
பீரியட் படமான இது, ஐரோப்பிய பின்னணியில் நடக்கும் காதல் கதையைக் கொண்டது. நடிகர் பிரபாஸ், விக்ரம் ஆதித்யா என்ற கைரேகை நிபுணராகவும், டாக்டர் பிரேர்னா எனும் கதாபாத்திரத்தில் பூஜா ஹெக்டேவும் நடித்துள்ளனர். ராதா கிருஷ்ணகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தை, யுவி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். பின்னணி இசையை தமன் அமைத்துள்ளார்.
கடந்த 2 வருடங்களாக கொரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்ட இந்தப் படம் தற்போது, தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள உள்ளிட்ட மொழிகளில் மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது. தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவீஸ் வெளியிடுகிறது. இந்நிலையில், இந்தப் படத்துக்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ள தகவலை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அமிதாப் பச்சன், ‘ராதே ஷ்யாம்’ படத்தின் தொடக்கத்தில் கதைப் பற்றி அவர் விவரிப்பார் (narrator) என்று கூறப்படுகிறது.