பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா நடித்திருக்கும் ’இக்கிஸ்’ படத்தின் ட்ரெய்லர் வரவேற்பைப் பெற்று வருகிறது.
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா. இவர், தற்போது புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளர் ஸ்ரீராம் ராகவன் இயக்கியிருக்கும் ’இக்கிஸ்’படத்தில் அறிமுகமாகி உள்ளார். இந்தியாவின் இளைய பரம் வீர் சக்ரா விருது பெற்ற இரண்டாம் லெப்டினன்ட் அருண் கேதர்பாலாக அகஸ்தியா நந்தா நடிக்கிறார், இந்திய-பாகிஸ்தான் போரின்போது அவருக்கு 21 வயதுதான். அவருடைய வாழ்க்கையைப் பற்றிய கதையைத் தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில், அகஸ்தியா நந்தாவுடன் தர்மேந்திரா மற்றும் ஜெய்தீப் அஹ்லாவத் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்தப் படம் டிசம்பர் 2025இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், ’இக்கிஸ்’படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில், இந்த ட்ரெய்லரைப் பார்த்து மெய்சிலிர்த்திருக்கும் அமிதாப் பச்சன், அகஸ்தியா நந்தாவைப் பாராட்டி பதிவொன்றைப் பகிர்ந்துள்ளார். அதில், "அகஸ்தியா.. நீ பிறந்தவுடனேயே உன்னை என் கைகளில் ஏந்தினேன்.. சில மாதங்களுக்குப் பிறகு, நான் உன்னை மீண்டும் என் கைகளில் ஏந்தினேன். உன் மென்மையான விரல்கள் என் தாடியுடன் விளையாட நீட்டின.. இன்று நீ உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் விளையாடுகிறாய்.. நீ சிறப்பு வாய்ந்தவன்.. உனக்கு என் வாழ்த்துகள் மற்றும் ஆசீர்வாதங்கள் அனைத்தும்.. உன் பணிக்கு மகிமையையும், குடும்பத்திற்கு மிகப்பெரிய பெருமையையும் கொண்டு வர வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார்.
அகஸ்தியாவின் தந்தையும் தொழிலதிபருமான நிகில் நந்தாவும், ட்ரெய்லரைப் பார்த்த பிறகு அவரும் முகநூலில் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அவர், "சில தருணங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு உன்னைப் பெருமைப்பட வைக்கின்றன. ’IKKIS’ படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தபோது, ஒரு தந்தையாகவும், ஓர் இந்தியராகவும் எனக்கு மிகுந்த பெருமை ஏற்பட்டது. அகஸ்தியா, இரண்டாம் லெப்டினன்ட் அருண் கேதர்பால் (PVC) வேடத்தில் நடித்திருப்பது, நமது தைரியத்திற்கும், நமது தேசத்தின் மன உறுதிக்கும் ஒரு நெகிழ்ச்சியான அஞ்சலி. இந்த எழுச்சியூட்டும் கதையைப் பகிர்ந்துகொள்ளும் அகஸ்தியா, ஸ்ரீராம் ராகவன் மற்றும் IKKIS குழுவினர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.