அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர் அமிதாப் பச்சன் ரூ.51 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும், பீகாரிலும் கடந்த வாரம் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் அசாம் மாநிலத்தில் 64 பேரும், பீகாரில் 102 பேரும் இதுவரை உயிரிழந்துள்ளனர். கஜிரங்கா தேசிய பூங்காவில் மட்டும் 141 விலங்குகள் உயிரிழந்துள்ளன.
பீகாரில் 12 மாவட்டங்களைச் சேர்ந்த 72 லட்சம் பேரும், அசாமில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 38 லட்சம் பேரும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழையைத் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தர்பங்காவில் உள்ள ஒரு கிராமத்தின் உள்ளூர்வாசிகள் பல்வேறு கஷ்டங்களை எதிர்கொண்டுள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் உணவு, குடிநீர், மருத்துவ சேவை மற்றும் உடைகள் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகிறார்கள்
மக்களின் நிலையை உணர்ந்து பலரும் உதவி செய்து வருகிறார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு அசாம் மாநிலம் அதிக பாதிப்புள்ளாகியுள்ளதால் மக்கள் முன்வந்து உதவ வேண்டுமென அம்மாநில அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்நிலையில் அசாம் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நடிகர் அமிதாப் பச்சன் ரூ.51 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார். அமிதாப் பச்சனின் உதவிக்கு அசாம் முதலமைச்சர் சர்பானந்த சோனாவால் நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக நடிகர் அக்ஷய்குமார் அசாம் வெள்ளத்துக்கு ரூ.1 கோடி நிதி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.