சினிமா

"திரை வாழ்க்கை, நிஜ வாழ்க்கை... பிரித்து அணுக முயல்கிறேன்" - அனுபவம் பகிரும் அமலா பால்

நிவேதா ஜெகராஜா

தன்னுடைய தந்தையின் மரணம், தன்னை எந்த அளவுக்கு மாற்றியது என்பது தொடர்பாக நடிகை அமலாபால் உணர்ச்சி மிகுதியாக பேசியிருக்கிறார். அத்துடன், தனது திரையுலக - தனிப்பட்ட வாழ்க்கை அனுபவத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

நடிகை அமலாபால் தற்போது தெலுங்கில் வெப் சீரிஸ் ஒன்றில் நடித்து முடித்துள்ளார். 'குடி யடமைத்தே' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த சீரிஸ் வெள்ளிக்கிழமை ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது. போலீஸ் கதாபாத்திரத்தில் இந்தத் தொடரில் நடித்திருக்கும் அமலாபால் தனது சீரிஸ் அனுபவங்களையும், திரையுலகில் அறிமுகமாகி 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது குறித்தும் பேசியிருக்கிறார்.

ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``நான் நானாகவே இருக்கிறேன். 17 வயதில் நான் திரைத்துறைக்குள் வந்தேன். எனது சொந்த வாழ்க்கையில் தனிப்பட்ட முறையில் நான் சந்தித்த, கடந்து வந்த விஷயங்கள் எனது சினிமா வாழ்க்கையிலும் பிரதிபலித்தன. அதேநேரம், சினிமா வாழ்க்கையில் நான் சந்தித்த விஷயங்கள் என் சொந்த வாழ்க்கையிலும் பிரதிபலித்தன. ஆனால் இவை இரண்டையும் பிரிக்கும் கலை பற்றி எனக்குத் தெரிந்திருக்கவில்லை.

2019 வரை இந்த விஷயங்களை பற்றி கூறி வந்தேன். ஆனால் 2020 எனது வாழ்க்கையை புரட்டிபோட்ட ஆண்டு. அந்த ஆண்டுதான் எனது தந்தை மறைந்தார். அவரின் மரணத்தை அடுத்து அந்த ஆண்டு என்னை நானே சுய பரிசோதனை செய்துகொள்ளும் காலகட்டமாக அமைத்தது. அந்த நேரத்தில் எனது தனிப்பட்ட வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் போல இருப்பதாக எண்ணினேன். எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை என்பதையும் என் வாழ்க்கை தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதைப் போலவும் உணரத் தொடங்கினேன். எனக்கு சொந்தமாக எதுவும் இல்லை என்ற இந்த உணர்தல் எனக்குள் இருந்துகொண்டே வந்தது.

இப்போது அந்த விஷயங்களை திரும்பி பார்க்கும்போது, அதைப் பற்றி நான் மோசமாக உணர்கிறேன். இப்போது, எனது தனிப்பட்ட வாழ்க்கையை எனது திரை வாழ்க்கையில் இருந்து பிரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறேன். அதுதான் தற்போது நான் பயிற்சி செய்து வரும் கலை. அதை கற்றுக்கொள்ள விரும்புகிறேன். என் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பது பற்றி நான் மிகவும் வெளிப்படையாக இருந்தேன். எல்லோரும் தங்கள் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டங்களில் இருக்கிறார்கள். இந்த விஷயங்களை, நான் எப்படி உணர்கிறேன் என்பதை அவர்களால் புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். இப்போது என் வாழ்க்கையில் சிலவற்றை அதிகம் பகிர்ந்து கொள்ளாமல் இருந்து வருகிறேன்" என்று உணர்ச்சிப் பொங்க பேசியிருக்கிறார்.