allu arjun pt
சினிமா

”கிட்னி ஏதாவது போச்சா?” சட்டசபையில் வெளுத்துவாங்கிய ரேவந்த் ரெட்டி; ஓடிவந்து அல்லு அர்ஜூன் விளக்கம்!

சட்டசபையில் தன்மீது வைக்கப்பட்ட அதீத குற்றச்சாட்டுகள் குறித்து உணர்ச்சிவசப்பட்டு பேசியிருக்கும் அல்லு அர்ஜுன், தன்னுடைய கேரக்டரை அவ்வளவு மோசமாக விமர்சிக்காதீர்கள் என பேசியுள்ளார்.

Rishan Vengai

சுகுமார் இயக்கி நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்திருக்கும் புஷ்பா 2 திரைப்படம், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு வசூலில் ரூ.1500 கோடியை கடந்து வெற்றிநடை போட்டுவருகிறது.

இருப்பினும் ஐதராபாத்தில் சிக்கடப்பள்ளியில் உள்ள சந்தியா திரையரங்கில், இந்த படத்தின் பிரீமியர் காட்சியைப் பார்க்கச் சென்ற 35 வயதான ரேவதி என்ற பெண் கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவருடைய 8 வயது மகன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்துவருகிறார்.

இந்நிலையில் பெண் உயிரிழந்த விவகாரத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் கைதுசெய்யப்பட்டு, பின்னர் விசாரணைக்கு உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது.

இந்த விவகாரம் குறித்து தெலங்கானா சட்டசபையில் பேசியிருக்கும் முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனின் கேரக்டரை கடுமையாக விமர்சித்தும், அவரை பார்க்கசென்ற திரைப்பிரபலங்களை கடுமையாக சாடியும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அல்லு அர்ஜுன் கேரக்டரை விமர்சித்த ரேவந்த் ரெட்டி..

சட்டசபையில் அல்லு அர்ஜுன் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்த ரேவந்த் ரெட்டி, நடிகர் அல்லு அர்ஜுன் சில மணிநேரம் தான் சிறையில் இருந்தார். ஆனால் அவரைக் காண தெலுங்கு திரையுலகமே சென்றிருக்கிறது. அவருக்கு கை, கால், கிட்னி ஏதாவது போய்விட்டதா? எதற்காக இந்த ஆதரவுகள்? நெரிசலில் சிக்கி பலியான பெண்ணைக் குறித்தோ, சிகிச்சையில் இருக்கும் அவரது மகனைக் குறித்தோ இவர்கள் கவலைப்பட்டார்களா? இந்த ஆதரவு மூலம் தெலுங்கு சினிமா திரையுலகம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது?

புஷ்பா 2 சிறப்புக்காட்சிக்கு அல்லு அர்ஜுன் வரக்கூடாது என்றும், அவர் வந்தால் கூட்டம் கூடும் என்பதால் வரவேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தியிருந்தது. அதையும் மீறி அவர் சென்றதால்தான் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. அதிலும் அவர் கார் ரூஃபை திறந்துகொண்டு ரசிகர்களுக்கு கையசைத்து கொண்டே வந்துள்ளார். அப்படி அவர் செய்ததால் தான் ரசிகர்கள் வேகமாக கூடி கூட்டநெரிசல் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒரு பெண் உயிரிழந்துள்ளார். அவரது மகனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

பெண் உயிரிழந்தது குறித்து அல்லு அர்ஜுனிடம் போலீசார் தெரிவித்துள்ளனர். அப்படியிருந்தும் தியேட்டரை விட்டு வெளியேறாமல் காரில் நின்று கொண்டு அவர் கையசைத்துக் கொண்டிருந்தார். இவ்வாறு செய்த அல்லு அர்ஜுன் எப்படிப்பட்ட மனிதராக இருப்பார்? அவரிடம்  வெளியேறாவிட்டால் கைது செய்வோம் என்று போலீசார் எச்சரித்த பின்னர்தான் அவர் வெளியேறினார். என்னுடைய ஆட்சி இருக்கும் வரை எந்த படத்திற்கும் சிறப்பு காட்சி இல்லை என்று கடுமையா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

உணர்ச்சிவசப்பட்ட அல்லு அர்ஜுன்..

சட்டசபையில் தன்மீது வைக்கப்பட்ட கடுமையான குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்த அல்லு அர்ஜுன், காவலர்கள் அனுமதி பெற்றபிறகே அங்கு சென்றதாக மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார். மேலும் அரசியல் தலைவர்கள் போல என்னுடைய வாகனத்தையும் கடந்து சென்றுவிடுவார்கள் என்று நினைத்து தான் நான் கார் ரூஃபிலிருந்து கையை காட்டினேன். இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரியவில்லை, இது ஒரு விபத்து என்று பேசினார்.

தன்னுடைய கேரக்டரை மோசமாக தாழ்த்தி பேச வேண்டாம் என்றும், நான் அப்படிப்பட்டவன் இல்லை என்றும் பேசிய அல்லு அர்ஜுன், “எனக்கும் அந்த சிறுவனின் வயதில் குழந்தை இருக்கிறது. ஒரு தகப்பனாக அந்த வேதனை எனக்கும் தெரியும், தற்போதுவரை சிறுவனின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து கேட்டறிந்து வருகிறேன். என்னுடைய கேரக்டரை தாழ்த்தி மிக மோசமாக பேசுவது வேதனையளிக்கிறது. நான் அப்படிப்பட்டவன் இல்லை, இத்தனை வருடத்தில் இப்படி நடந்தது கிடையாது. இது ஒரு விபத்து, இதில் யார்மீதும் தவறு இல்லை” என்று எமோசனலாக பேசியுள்ளார்.