சினிமா

இரண்டு பாகங்களாக வெளியாகும் அல்லு அர்ஜுனின் புஷ்பா!

sharpana

அல்லு அர்ஜுன் நடித்துள்ள ‘புஷ்பா’  இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது.

’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் ஹீரோ அறிமுக டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கடத்தல்கார லாரி டிரைவராக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.

இந்நிலையில், ‘புஷ்பா’ இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று படத்தை தயாரித்துள்ள மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது. ’கே.ஜி.எஃப்’ போலவே இரண்டு பாகங்கள் என்பதால் இன்னும் எதிர்பார்ப்புகள் கூடியுள்ளன.

படப்பிடிப்பு முழு வீச்சுடன் நடந்து வந்த நிலையில், இன்னும் சில காட்சிகளே மிச்சம் உள்ளன. இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து சுமார் ரூபாய் 250 கோடி முதல் 270 கோடி வரை செலவாகலாம் என்று கூறப்படுகிறது. இரண்டு பாகங்களுக்கு படத்தின் கதையை சொல்ல வேண்டிய தேவை இருப்பதால் இந்த முடிவை தயாரிப்பாளர்கள் எடுத்துள்ளனர். முதல் பாகம் வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இரண்டாம் பாகம் அடுத்த வருடம் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.