சினிமா

டிசம்பரில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ : அதிகாரபூர்வ அறிவிப்பு

டிசம்பரில் வெளியாகும் அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ : அதிகாரபூர்வ அறிவிப்பு

sharpana

அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’ பட முதல் பாகத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.


’அலா வைகுந்தபுரம் லோ’ படத்தின் வெற்றிக்குப் பிறகு தெலுங்கின் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன், பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் ‘புஷ்பா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். செம்மரக்கட்டை கடத்தல் கதைக்களத்தைக் கொண்ட இப்படத்தின் ஹீரோ அறிமுக டீசர், சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. கடத்தல்கார லாரி டிரைவராக நடிக்கும் அல்லு அர்ஜுனுக்கு ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்கிறார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார்.

இரண்டு பாகங்களாக வெளியாகும் புஷ்பா படத்தின் முதல் பாகம் இம்மாதம் 13 ஆம் தேதி வெளியாகும் என்று சமீபத்தில் அறிவித்திருந்தது படக்குழு. ஆனால், கொரோனா பரவலின் இரண்டாவது அலை இன்னும் முடியாததால் படத்தை அறிவித்த தேதியில் முதல் பாடலை வெளியிடுவதாக நேற்று அறிவித்தது படக்குழு.

இந்த நிலையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் ‘புஷ்பா’ முதல் பாகம் வரும் டிசம்பர் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தியேட்டர்களில் வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால்,அல்லு அர்ஜுன் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தெலுங்கு மட்டுமல்லாமல், தமிழ் மொழியிலும் புஷ்பா வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது