சினிமா

”முடிவுக்கு வந்தது காத்திருப்பு”- வலிமை வெளியீட்டு தேதியை அறிவித்தார் போனி கபூர்

நிவேதா ஜெகராஜா

கொரோனா பரவல் காரணமாக தள்ளிப்போடப்பட்டிருந்த நடிகர் அஜித்குமாரின் வலிமை திரைப்படம், பிப்ரவரி 24 ம் தேதி உலகளவில் திரையரங்கில் வெளியாகயிருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்த தன் பதிவில் போனி கபூர், “வார்த்தைகளை விட செயல்களே அதிகம் பேசும். படத்துக்கான காத்திருப்பு தற்போது நிஜமாகவே முடிவுக்கு வந்துவிட்டது. வலிமையின் அனுபவத்தை, பிப்ரவரி 24ம் தேதி உலகளவில் திரையங்குகளில் பெறுங்கள்” என தெரிவித்துள்ளார்.

பொங்கலையொட்டி கடந்த ஜனவரி 13 ஆம் தேதி வெளியாவதாக இருந்த ‘வலிமை’ படத்தினை கொரோனா அதிகரிப்பாலும் தியேட்டர்களில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்பதாலும் தள்ளி வைத்தது படக்குழு. இதனால், ஏப்ரலில் வெளியாகும் ‘பீஸ்ட்’டுக்கு முன்னால் ’வலிமை’ படத்தினை மார்ச் மாதம் கொண்டுவர படக்குழு திட்டமிட்டிருந்தது. அதற்கேற்ப தற்போது தமிழக அரசு ஊரடங்கு விதிகளையும் கொரோனா விதிமுறை கட்டுப்பாடுகளையும் தளர்த்தியுள்ளதால், வரும் பிப்ரவரி 24 ஆம் தேதி ‘வலிமை’ படம் திரைக்கு வருகிறது.