Ajith , Shalini  web
சினிமா

அஜித் - ஷாலினி திருமண நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்!

அஜித்-ஷாலினி திருமண நாளை முன்னிட்டு, அவர்களின் கல்ட் ஹிட் ‘அமர்க்களம்’ திரைப்படம் 24ஆம் தேதி ரீ ரிலீஸ் ஆகிறது.

PT WEB

26 ஆண்டுகள் கடந்தும் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சி இழக்காத ‘அமர்க்களம்’ படம், அஜித்தின் 25வது படமாகவும், அவரது தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருப்புமுனையாகவும் இருந்தது. அதே நாளில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய AK பட அறிவிப்பும் ரசிகர்களுக்கு கூடுதல் இன்ப அதிர்ச்சியாக உள்ளது.

அஜித் - ஷாலினி திருமண நாளை முன்னிட்டு, அவர்கள் இணைந்து நடித்த ‘அமர்க்களம்’ திரைப்படம் வரும் 24ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

நடிகர் அஜித் ஒருபக்கம் சினிமா மறுப்பக்கம் ரேஸிங் என இரண்டிலும் ஈடுபட்டு பிஸியாக இருந்து வருகிறார். குறிப்பாக அஜித் குமார் ரேஸிங் என்ற நிறுவனத்தை தொடங்கி உலகிலுள்ள பல்வேறு ரேஸிங்கில் பங்கேற்று வருகிறார். சினிமாவில் அஜித்திற்கு எப்படி அவரது ரசிகர்கள் ஆதரவு கொடுத்தார்களோ அதே அளவிலான ஆதரவை ரேஸிங் ட்ராக்கிற்கும் வந்து கொடுத்து வருகின்றனர்.

Ajith & Shalini

அந்த சமயத்தில் அவருக்காக வரும் ரசிகர்களோடு புகைப்படம் எடுத்துகொள்வது, அவர்களுக்கு உரையாடுவது போன்ற நிகழ்வுகளும் நடைபெறுகிறது. அதே போல் சில ரசிகர்களின் செயலால் விரும்பத்தகாத செயல்களும் நடைபெறுவதுண்டு.

மேலும், முன்பை போல் இல்லாமல் நடிகர் அஜித் படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டதால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர். அதனால் அவரது படங்கள் ரீ ரிலீஸ் செய்யப்படும் போதெல்லாம் அதனை கொண்டாடி தீர்ப்பதுண்டு. மங்காத்தா போன்ற படங்களை திரையில் கொண்டாடிய காட்சியே இதற்கு சாட்சி.

Ajith Kumar

நடிகர் அஜித் 1993-ல் வெளிவந்த ‘அமராவதி’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். பின்னர் ‘ஆசை', 'காதல் கோட்டை', 'வாலி', 'அமர்க்களம்', 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ போன்ற படங்கள் அவருக்கு பெரிய ரசிகர்களைப் பெற்றுத்தந்தது.

அந்த வகையில், அஜித்தின் 25ஆவது திரைப்படமாக உருவான ‘அமர்க்களம்’, கடந்த 1999ஆம் ஆண்டு திரைக்கு வந்து அவரது திரை வாழ்க்கையிலும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. ஆக்‌ஷன், காதல் காட்சிகள் நிறைந்த இப்படத்திற்கு, பரத்வாஜ் இசையில் உருவான பாடல்கள் பக்கபலமாக அமைந்தன.

இப்படம் வெளியாகி 26 ஆண்டுகளைக் கடந்துள்ள சூழலில், அஜித் - ஷாலினி திருமண நாளை முன்னிட்டு மீண்டும் திரைக்கு வரவுள்ளது. அதேநாளில், விஜயின் ’சிவகாசி’, மாதவனின் ’ரன்’ ஆகிய படங்களும் ரீ ரிலீஸ் ஆவது குறிப்பிடத்தக்கது.

Ajith & Shalini

அஜித்தை பொறுத்தவரை அவர் அடுத்து நடிக்கும் படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார். இது தொடர்பான படத்தின் அறிவிப்பு 24-ம் தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தெரிகிறது.