சினிமா

துணிவு Vs வாரிசு ட்ரைலர்: ஒரு மணி நேரத்தில் எவ்வளவு பேர் பார்த்திருக்காங்க தெரியுமா?

சங்கீதா

அஜித்தின் ‘துணிவு’ படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

நடிகர் அஜித், ஹெச் வினோத் 3-வது முறையாக இணைந்துள்ளப் படம் ‘துணிவு’. இந்தப் படத்தை போனி கபூர், ஜீ ஸ்டூடியோஸ் உடன் இணைந்து தயாரித்துள்ளார். ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் பாடல்களான ‘சில்லா சில்லா’, ‘காசேதான் கடவுளடா’, ‘கேங்ஸ்டா’ உள்ளிட்டவை யூட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. கடந்த மாதம் 31-ம் தேதி வெளியான ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் ரசிகர்களை கவர்ந்த நிலையில், படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்காமல் இருந்து வந்தது.

இந்நிலையில், வரும் 11-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் ‘துணிவு’ படம் வெளியாக உள்ளதாக போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதேநேரத்தில், முன்னதாக விஜய்யின் ‘வாரிசு’ தமிழ் ட்ரெய்லர் மாலை 5 மணிக்கு வெளியிடப்பட்டு, ஒரு மணிநேரத்தில் 5 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி சாதனை படைத்தது. அஜித்தின் ‘துணிவு’ படத்தின் ட்ரெய்லர் ஒரு மணிநேரத்தில் 3 மில்லியன் பார்வையாளர்களே கடந்திருந்தது.

சென்னை ரோகிணி திரையரங்கில் பிரத்யேகமாக ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. அப்போது அதனைக்காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். இதனிடையே ‘வாரிசு’ படத்தின் தெலுங்குப் பதிப்பான ‘வாரசுடு’ ட்ரெய்லரும் மாலை 7 மணியளவில் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.