அஜித் மேற்பார்வையின் கீழ் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
அஜித் ஒரு டெக்னாலஜி பிரியர். அவர் தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை முதலில் பைக் ரேஸ் பக்கம் பயன்படுத்திக் கொண்டிருந்தார். அதன் பிறகு அது கார் ரேஸ் போகும் அளவுக்கு முன்னேற்றம் கண்டது. அதன் பிறகு சிறிய ரக எலிகாப்டர்களை தயாரித்து வந்தார். இவை எல்லாவற்றையும் அஜித் முறைப்படி கற்றுத் தேர்ந்தார். அதற்கான அனைத்து உரிமங்களையும் அவர் பெற்றார். ‘விவேகம்’ படப்பிடிப்பின் போது அவர் யூரோப் நாடுகளில் பைக் ரேஸ் செய்தார். முறைப்படி வெளிநாட்டு ஓட்டுநர் உரிமம் உள்ள ஒருவர்தான் அதனை செய்ய முடியும். சர்வதேச விதிகள்படி அவர் உரிமம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரது தொழில்நுட்ப அறிவை சென்னை எம்ஐடி பயன்படுத்திக் கொள்ள விரும்பியது. ஆகவே மெட்ராஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அஜித்தின் உதவியை நாடியது. பேரிடர் காலங்களில் மருத்துவ உதவிகளுக்காக ட்ரோன் தயாரிப்பில் இறங்கியது எம்ஐடி. ட்ரோன் என்றால் ஆளில்லா விமானம் என்பது பொருள். இதனை தயாரிக்க அமைக்கப்பட்ட ‘தக்ஷா’ குழுவின் ஆலோசகராக அஜித் செயல்பட தொடங்கினார்.
அவரது தலைமையின் கீழ் உருவாக்கப்பட்ட ட்ரோன், இந்தியா முழுவதும் உள்ள 111 பொறியியல் கல்லூரிகளுக்கிடையே நடந்த போட்டியில் கலந்து கொண்டது. போட்டி முடிவில் அஜித்தின் ஆலோசனைபடி தயாரிக்கப்பட்ட ஆளில்லா விமானம் பல சாதனைகளைப் படைத்துள்ளது.
இந்தப் போட்டியில்‘தக்ஷா’குழுவினரின் ட்ரோன் 6 மணி நேரம் 7 நிமிடங்கள் வரை வானில் பறந்தது. இதன் மூலம் உலகத்திலேயே அதிக நேரம் பறக்கக்கூடிய ட்ரோன் இதுதான் என்று சாதனை படைத்துள்ளது. இந்த ஆளில்லா விமானம் மூலம் 10 கிலோ எடை வரை உள்ள பொருட்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல முடியும். பேரிடர் காலங்களில் மருத்துப் பொருட்களை சுமந்து செல்ல இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என இந்த ஆய்வில் ஈடுப்பட்ட மாணவர்கள் கூறியுள்ளனர்.