கொரோனா நேரத்தில் காமென் டிபி கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாமென அஜித் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டதாக நடிகர் ஆதவ் கண்ணதாசன் ட்வீட் செய்துள்ளார்
மே1ம் தேதி நடிகர் அஜித் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர்கள் பொதுவான டிபி பயன்படுத்தி சமூக வலைதளங்களில் கொண்டாடலாம் என திட்டமிட்டு இருந்தனர். இதற்காக உருவாக்கப்பட்ட பொதுவான காமென் டிபியை ஹன்சிகா, பிரியா ஆனந்த், பிரேம்ஜி, அருண் விஜய், ஆதவ் கண்ணதாசன் என மொத்தம் 14 பிரபலங்களை கொண்டு வெளியிட அஜித் ரசிகர்கள் திட்டமிட்டு இருந்தனர்.
இந்நிலையில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ள இந்த நேரத்தில் காமென் டிபி கொண்டாட்டங்கள் ஏதும் வேண்டாமென அஜித் அலுவலகத்தில் இருந்து கேட்டுக்கொண்டதாக ஆதவ் கண்ணதாசன் ட்வீட் செய்துள்ளார். இது குறித்து தெரிவித்துள்ள அவர், ''அஜித் சார் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. கொரோனா காலக்கட்டத்தில் காமென் டிபி கொண்டாட்டங்கள் வேண்டாமென கேட்டுக்கொண்டனர்.
இது அஜித்தின் தனிப்பட்ட வேண்டுகோளும் கூட. ஒரு ரசிகனாக, ஒரு நடிகனாக அவரது வார்த்தைக்கு நான் மதிப்பு கொடுக்கிறேன். இது அஜித்தின் வேண்டுகோள், அவரது வார்த்தைகளுக்கு நாம் மதிப்பு கொடுப்போம்'' என தெரிவித்துள்ளார்.