சினிமா

அஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'!

அஜித் ரசிகருக்கு கடிதம் எழுதிய படக்குழு: உடனே கிடைத்த 'வலிமை'!

webteam

இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’. இப்படம் வெளியாகி  நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து அஜித்தின் 60-வது படத்தையும் ஹெச்.வினோத்தே இயக்குவார் எனக் கூறப்பட்டது. இதையும் போனி கபூர்தான் தயாரிக்க உள்ளார். படத்திற்கு யுவன் சங்கர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், படத்தின் பூஜை சமீபத்தில் போனி கபூரின் சென்னை அலுவலகத்தில் நடைபெற்றது. பூஜையின் போதே படத்திற்கு, ‘வலிமை’ என்ற பெயரையும் படக்குழு வெளியிட்டனர். பொதுவாக அஜித்தின் படம் தொடங்கும் போது படத்தின் பெயர் வெளியிடப்படாது. ஆனால் தேவையற்ற எதிர்பார்ப்பை உண்டாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் தலைப்பு வெளியிடப்பட்டதாக படக்குழு தெரிவித்தது.

இந்நிலையில் வலிமை என்ற தலைப்பு கெனன்யா பிலிம்ஸ் உரிமையாளர் செல்வகுமாரிடம் இருந்ததாக கூறப்படுகிறது. அந்த தலைப்பையே தீர்மானித்த அஜித் -வினோத் படக்குழு, செல்வகுமாருக்கு கடிதம் மூலம் அனுமதி கோரியது. செல்வகுமார் தீவிரமான அஜித் ரசிகர் என்பதால் வலிமை என்ற தலைப்பை பயன்படுத்த உடனே அனுமதி கொடுத்துள்ளார். வலிமை படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ள நிலையில் பிற நடிகர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.