’வலிமை’ படத்தில் நடித்துவரும் அஜித்தின் புதிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிப்பில், அஜித் நடித்த ’நேர்கொண்ட பார்வை’ கடந்த ஆண்டு வெளியாகி பாராட்டுகளைக் குவித்தது. இப்படத்தினை 'சதுரங்க வேட்டை', 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய வெற்றி இயக்குநர் ஹெச். வினோத் இயக்கி இருந்தார். 'நேர்கொண்ட பார்வை'-யின் வெற்றியால், இக்கூட்டணி மீண்டும் ’வலிமை’ படத்தில் இணைந்தது. 'ஈஸ்வர மூர்த்தி’ என்ற பெயரில் அஜித் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார்.
தற்போது, ஹைதராபாத், ராஜஸ்தானில் படப்பிடிப்பை முடித்த படக்குழு தற்போது சண்டைக் காட்சிக்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இம்மாத இறுதிக்குள் படத்தை முடித்து அஜித்தின் 50-வது பிறந்தநாளான மே 1-ஆம் தேதி தியேட்டர்களில் கொண்டுவர கடுமையாக உழைத்து வருகிறது.
விஜய், தனுஷ், சூர்யா என முன்னணி நடிகர்களின் அடுத்தடுத்த படங்களின் வெளியீடுகளும் அப்டேட்டுகளும் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், வலிமை படத்தின் அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகாததால் ரசிகர்கள் அப்டேட் கேட்டு வருகிறார். இதனால், வலிமை படத்தில் அஜித் பைக் ஓட்டும் புகைப்படம் சமீபத்தில் வைரலானது. இந்நிலையில், அஜித் கருப்புநிற டி ஷர்ட்டில் புன்னகைக்கும் புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டில் உள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.