நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸிங்கை பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ஆவணப்படம் தான் 'கிளாடியேட்டர்ஸ் - இன் பர்சூட் ஆஃப் சேலஞ்சஸ்'. இப்படத்தை பிரபல இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அஜித் குமார் மனைவி ஷாலினி அஜித்குமார் மற்றும் கோல்டன் ட்ராபி ஃபிலிம் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
நடிகர் அஜித் குமார் சர்வதேச கார் பந்தயங்களில் அடி எடுத்து வைத்தது முதல் அவர் பங்கேற்ற போது சந்தித்த சவால்கள், வெற்றிகள், தோல்விகள் மற்றும் அவரது ரேஸிங் குழுவின் பயணத்தை ஆவணப்படுத்தும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்குவதற்காக இந்த ஆவணப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை பிரத்தியேகமாக திரையரங்குகளில் இன்று மாலை வெளியாக உள்ளது.
3 நிமிடம் 49 நொடிகள் ஓடக்கூடிய படத்தின் டிரெய்லரை தமிழகத்தின் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இன்று மாலை 6.40 மணிக்கு பிரத்தியேகமாக படக்குழு வெளியிட உள்ளது.