குட் பேட் அக்லி web
சினிமா

”AK வரார் வழிவிடுடா” "கொஞ்சம் இருங்க பாய்” - தெறிக்கவிடும் அஜித் குமாரின் குட் பேட் அக்லி ட்ரெய்லர்!

நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகியிருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Rishan Vengai

நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெறாத நிலையில், ஒரே நம்பிக்கையாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகிவரும் குட் பேட் அக்லி படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருந்துவருகிறது.

குட் பேட் அக்லி

அதற்கேற்றார்போல் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி அஜித் ரசிகர்கள் எதிர்ப்பார்த்ததை விட சம்பவம் செய்து மிரட்டிவிட்டது. அஜித்தை எந்த திரைப்படங்களில் எல்லாம் பார்த்து பிடித்துப்போனதோ, அப்படியான வாலி, ரெட், பில்லா, மங்காத்தா, வேதாளம் முதலிய படங்களின் ரெஃபரன்ஸை வைக்காமல், அஜித்தையே அப்படி நடிக்க வைத்திருந்தது ’என்னமோ பண்ணிருக்கான் யா இந்த மனுசன்’ என ஆதிக் ரவிச்சந்திரன் வேலையை கண்டு அஜித் ரசிகர்கள் ஆச்சரியப்பட்டனர்.

திரைப்படம் வரும் 10-ம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில் குட் பேட் அக்லியின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளது படக்குழு.

எப்படி இருக்கிறது ட்ரெய்லர்..

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் ’குட் பேட் அக்லி' படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் அஜித் உடன் த்ரிஷா, அர்ஜுன் தாஸ், பிரபு, பிரசன்னா, சுனில், சிம்ரன் முதலியோர் சேர்ந்து நடித்துள்ளனர். இந்த படத்தை தெலுங்கில் புஷ்பா படத்தை தயாரித்த மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். வரும் 10-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், தியேட்டர் புக்கிங் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

படத்தின் ட்ரெய்லரை பொறுத்தவரையில், கேங்க்ஸ்டர் திரைப்படமாக குட் பேட் அக்லி கதை இருப்பது தெரிகிறது. ரியல் கேங்ஸ்டராக இருந்த பழைய கேங்ஸ்டர் ஒருவர் தன்னுடைய மகனுக்காக மீண்டும் கேங்ஸ்டர் உலகில் கால்பதிப்பது போல ட்ரெய்லர் அஜித்தின் கேரக்டரை தெளிவுபடுத்துகிறது. ஒத்த ரூபாயும் தாரன் என்ற பாடலோடு ஆட்டம் பாட்டமாக வரும் வில்லன் அர்ஜுன் தாஸ், எந்தளவு அந்த கேரக்டரை தாங்கிப்பிடித்துள்ளார் என்பதை படத்தை வைத்தே நம்மால் கூற முடியும். த்ரிஷா மங்காத்தா ரெஃபரன்ஸையும், சிம்ரன் வாலி ரெஃபரன்ஸையும் கூறுவது போல காட்சிகள் இடம்பெற்றுள்ளது. மங்காத்தா, பில்லா, வேதாளம் என அஜித்தின் மற்ற படங்களின் ரெஃபரன்ஸும் ட்ரெய்லரில் இடம்பெற்றுள்ளது.

ஒட்டுமொத்தமாக மார்க் ஆண்டனி படத்தின் சாயல் தெரிவது போல இருந்தாலும், இயக்குநர் மீதான வேலையில் ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். எப்படி இருப்பினும் இப்படம் அஜித் ரசிகர்களுக்கு தீபாவளியாக இருக்கப்போகிறார், இயக்குநர் படத்தில் என்ன செய்துள்ளார் என்பதை பொறுத்தே அது பிளாக்பஸ்டராக மாறும்.