’விசுவாசம்’ படப்பிடிப்புக்கு இசை அமைப்பாளர் டி.இமானை அழைத்த நடிகர் அஜித்குமார் அவரை பாராட்டியுள்ளார்.
அஜித் நடிக்கும் ’விசுவாசம்’ படத்தின் ஷூட்டிங் ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. சிவா இயக்கும் இந்தப் படத்தில் அஜித் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மற்றும் தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு வெற்றி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார். சுமார் நூறு படங்களுக்கு மேல் இசை அமைத்துள்ள டி.இமான், அஜித் படத்துக்கு இசை அமைப்பது இதுவே முதல் முறை.
படத்துக்காக மூன்று பாடல்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார் இமான். இதைக் கேட்டு ரசித்த அஜித், இமானை படப்பிடிப்புக்கு அழைத்தார். இதையடுத்து ஐதராபாத் சென்ற இமான், தனது பாடலுக்கு அஜித் நடனமாடுவதைப் பார்த்து ரசித்தார்.
இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள இமான், ‘எனது பாடல் காட்சிப்படுத்தப்படுவதை நான் அதிகம் பார்த்ததில்லை. ஆனால், இன்று அதை பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. எனது ட்யூனுக்கு எளிமையின் நாயகன் ரசித்து நடனம் ஆடுவதை ரசித்தேன்’ என்று கூறியுள்ளார்.