சினிமா

பைக் ஸ்டண்ட்டின்போது அஜித்திற்கு விபத்து; ஆனாலும் தொடர்ந்து நடைபெற்ற வலிமை ஷூட்டிங்!

பைக் ஸ்டண்ட்டின்போது அஜித்திற்கு விபத்து; ஆனாலும் தொடர்ந்து நடைபெற்ற வலிமை ஷூட்டிங்!

webteam

அஜித் தாமதம் செய்வதால் படப்பிடிப்பு தள்ளிப்போவதாக வெளியான தகவல்கள் வதந்தி என செய்திகள் வெளியாகியுள்ளன.

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பின் நடிகர் அஜித், இயக்குநர் ஹெச்.வினோத் எடுத்து வரும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்தியின் ‘பிங்க்’ படத்தைத் தழுவி ‘நேர்கொண்ட பார்வை’யை எடுத்திருந்த இயக்குநர் வினோத், இப்போது தனது சொந்த பாணியிலான புதிய படத்தை இயக்கி வருகிறார். ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கியது. இதனை இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

சென்னை, ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்துவந்த நிலையில் நடிகர் அஜித்தால் தாமதங்கள் நிலவுவதாகத் தகவல் வெளியானது. மாணவர்களுடன் இணைந்து தற்போது குட்டி ஹெலிகாப்டர் உருவாக்கம் தொடர்பான புதிய திட்டத்தில் அஜித் ஈடுபடுவதாகவும், அதனால் படப்பிடிப்பு தள்ளிப்போவதாகவும் செய்திகள் பரவின. இதனால் இயக்குநர் ஹெச். வினோத் மன வருத்தத்தில் உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால் அப்படி வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தி என்றும், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு செல்வதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே பைக் ஸ்டண்ட் காட்சியின்போது சிறு விபத்து ஏற்பட்டு அஜித்துக்கு கையிலும், காலிலும் காயம் ஏற்பட்டதாகவும், ஆனால் 20 நிமிடங்கள் மட்டுமே ஓய்வு எடுத்த அஜித் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்த பின்னரே அவரது குடும்ப மருத்துவரை பார்க்கச் சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் சிறு காயம் என்பதால் விரைவில் மீண்டும் அஜித் படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளதாகவும், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.