அஜித் நடித்து விரைவில் வெளியாக உள்ள படம் விவேகம். சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி புயலைக் கிளப்பியது. இதுவரை விவேகம் டீசரை 1 கோடியே 20 லட்சம் பேருக்கு மேற்பட்டோர் பார்வையிட்டுள்ளனர். இப்படத்தில் அஜித் இதுவரை இல்லாத அளவுக்கு தன் உடம்பை வருத்தி நடித்துள்ளார் என்பதால் படம் எப்போது வெளியாகும் என்று அவர் ரசிகர்களும் வெறியோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அஜித் நடித்த படங்களிலேயே அதிக நாட்கள் வெளிநாட்டில் ஷூட்டிங் செய்யப்பட்டது இந்த படத்தில்தான். விவேகம் படத்துக்காக 72 நாட்கள் ஐரோப்பிய நாடுகளில் ஷூட்டிங் நடந்தது. இந்த படத்தில் வரும் அஜித்தின் சிக்ஸ் பேக் தோற்றம் கம்பியூட்டர் கிராபிக்ஸ் என்று சிலர் கூறிவரும் நிலையில், அஜித் உண்மையிலேயே உடலை வருத்தி நடித்துள்ளார் என்று அவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர். வேதாளம் படத்தில் அப்பாவியாகத் தோன்றும் அஜித், ஒரு கட்டத்தில் ‘தெறிக்கவிடலாமா’ என்று வேறு அவதாரம் எடுப்பார். அந்தக் காட்சி ரசிகர்களை திரையரங்கில் கதற வைத்தது. அதேபோல் ஒரு காட்சியில் அஜித் தன்னுடைய சிக்ஸ் பேக்கில் தோன்றி ரசிகர்களை பரவசப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அஜித்தைத் தவிர வேதாளம் படித்தில் நடித்த எந்த நடிகரும், விவேகம் படத்தில் நடிக்கவில்லை என்று தெரிகிறது. கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்ஷரா ஹாசன் இந்தப்படத்தில் முதன்முறையாக தமிழில் அறிமுகமாகிறார். பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். இதுவரை வெளியான எந்த அஜித் படத்தின் சாயலும், விவேகத்தில் தெரியக்கூடாது என்று கவனமாக இயக்கியுள்ளாராம், இயக்குனர் சிவா.