அஜித் விசுவாசத்திற்காக கையை அறுத்துக் கொண்ட ரசிகர் ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
தனது ரசிகர் மன்றங்களை எப்போதோ கலைத்துவிட்டார் அஜித். ஆனால் அவர் கலைத்த பின்புதான் அவரது ரசிகர்கள் பட்டாளத்தின் எண்ணிக்கை அதிகரித்தது. அது ஒரு மேஜிக் என அவரது ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். அவர் ரசிகர்களை சந்திப்பதில்லை. விழாக்களில் கலந்து கொள்வதில்லை. தான் உண்டு; தன் வேலை உண்டு என போகிறது அஜித் வாழ்க்கை. அந்தப் பாதையை விட்டு அவர் விலக்குவதாக இல்லை. ஆனால் அவரை பற்றி ஏதாவது நெகடிவ் செய்திகள் தலைத்தூக்கினால் ‘தல’ ரசிகர்கள் தாறுமாறாக களத்தில் குத்து விடுகின்றனர்.
சமீபத்தில் கூட காவிரி வேண்டி நடந்த திரை உலகினர் போராட்டத்தில் அவர் கலந்து கொள்ளவில்லை என்பதால் விமர்சனங்கள் எழுந்தன. ‘தமிழுணர்வு அஜித்திற்கு இல்லையா?’ என கேள்வி முன் வைக்கப்பட்டது. அதனையொட்டி அவரது ரசிகர் ஒருவர் பேசிய வீடியோ பதிவில் “தல திருவான்மியூர் விட்டு வாசல்ல வந்து நின்னாருனா ரோகினி தியேட்டர் மேல காவிரி ஓடும்” என பேசி இருந்தார். அதை வைத்து ட்விட்டரில் ‘ரோகினி மேல காவிரி’ ட்ரெண்ட் ஆனது.
இந்நிலையில் அவரது ரசிகர் ஒருவர் தனது கைகளை ப்ளேட் மூலம் கீறி வெளியேறும் ரத்தத்தை கொண்டு அவர் ஒரு காகிதத்தில் ‘விசுவாசம்’ என எழுதி வைத்துள்ளார். அதைக் கண்ட பலர் அவரது இந்தச் செய்கையை விமர்சித்து வருகின்றனர்.