அஜித்தின் ‘வலிமை’ படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘வலிமை’. இதனை ஹெச். வினோத் இயக்கி வருகிறார். இதற்கான முற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வந்தது. அதில் அஜித் பங்கேற்றிருந்தார். அவரது புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பகிரப்பட்டது. இந்த முதற்கட்ட வேலைகள் சமீபத்தில்தான் நிறைவடைந்தன. அதனை அடுத்து சென்னையில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. சென்னை ரேகா கார்டன் பகுதியில் மொத்தம் மூன்று நாள்கள் இதற்கான பணிகள் நடைபெறுகின்றன.
இந்தப் படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். பல வருடங்களுக்குப் பிறகு அஜித் இதில் பெப்பர் அண்ட் சால்ட் தோற்றத்தை கைவிட்டு இளம் வேடத்தில் தோன்ற இருக்கிறார். மேலும் போலீஸ் அதிகாரி வேடத்திலும் நடிக்கிறார். இதுதவிர இவரது புதிய தோற்றம் ஒன்றும் ரகசியமாக மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். நீரவ் ஷா ஒளிப்பதி செய்கிறார். யாமினி கெளதம் நாயகியாக நடிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.
இந்தப் படத்தில் அஜித்தின் அமைதிக்குள் பொதிந்துள்ள வலிமை என்ன என்பதை புரியவைக்கும் விதத்தில் கதை அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே படத்திற்கு ‘வலிமை’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.