விஸ்வாசம்’ படத்தைத் தொடர்ந்து அஜித்குமார் நடித்து வரும் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். இதை 'சதுரங்கவேட்டை, 'தீரன் அதிகாரம் ஒன்று' படங்களை இயக்கிய, வினோத் குமார் இயக்கி வருகிறார். இதற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடித்து வெற்றிபெற்ற பிங்க் படத்தின் ரீமேக்காக வெளியாகிறது. படத்திற்கு ‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலம் தமிழில் முதன்முறையாக வித்யா பாலன் அறிமுகமாகிறார். படத்தில் அஜித்தின் மனைவியாக வித்யா பாலன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முக்கிய வேடங்களில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், இந்தி ‘பிங்க்’ படத்தில் நடித்திருந்த ஆண்ட்ரியா தாரங் நடிக்கின்றனர். மேலும், அர்ஜுன் சிதம்பரம், அஸ்வின் ராவ், சுஜித் ஷங்கர், அபிராமி வெங்கடாசலம் உட்பட பலர் நடிக்கின்றனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் அஜித் பிறந்தநாளான மே1ம் தேதி வெளியாகும் என கூறப்பட்ட நிலையில் தற்போது படம் வெளியாகும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் மே 31 ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. பிரபல இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சாய்பல்லவி மற்றும் ரகுல் ஃப்ரீத் ஆகியோர் நடித்துள்ளனர்.
இரண்டு முக்கிய திரைப்படங்களின் ரிலீஸ் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து இரு தரப்பு ரசிகர்களும் சமூக வலைதளங்களில் ஹேஸ்டேக்குகளை ட்ரெண்டு செய்து கொண்டாடினர்.