சினிமா

கைதி படத்தின் இந்தி ரீமேக்..வெளியானது ‘போலா’ டீசர்; ஹீரோயிசத்தில் மிரட்டும் அஜய் தேவ்கன்!

சங்கீதா

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று டீசர் வெளியாகியுள்ளது.

‘மாநகரம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ், தனது இரண்டாவது படமாக ‘கைதி’ திரைப்படத்தை இயக்கியிருந்தார். கார்த்தி, நரேன், அர்ஜூன் தாஸ், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்தப் படம், கடந்த 2019-ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியானது. 25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து, லோகேஷ் கனகராஜை அடுத்த தளத்திற்கு கொண்டு சென்றது. சாம் சி.எஸ்ஸின் அதிரடியான இசையும், சத்யன் சூர்யனின் தரமான ஒளிப்பதிவும், பிலோமின் ராஜின் படத்தொகுப்பும் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தை துவக்கி வைத்தன.

எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்த இந்தப் படம் தற்போது, இந்தியில் ‘போலா’ (Bholaa) என்றப் பெயரில் ரீமேக்காகி உள்ளது. அஜய் தேவ்கன் தயாரித்து, இயக்கி, நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக தபு நடித்துள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. தமிழில் டீசர் கட்டே மிரட்டலாக இருந்தநிலையில், இந்தியில் ஹீரோயிசம் தூக்கலாகவும், சூலாயுதத்துடன் அஜய் தேவ்கன் வருவது போன்றும் இருப்பது படத்தின் திசையே மாறியிருக்குமோ என்று அஞ்ச தோன்றுகிறது. சிறையில் இருந்து புத்தகத்துடன் வெளியே வரும் அஜய் தேவ்கனுக்கு பெரிய பில் அப் கொடுக்கப்படுகின்றது.

கைதி படத்தினை பொறுத்தவரை கதையில் நரேன் கதாபாத்திரத்திற்கு அதிக முக்கியத்துடன் கொடுக்கப்பட்டிருக்கும். கிட்டத்ட்ட படத்தில் கார்த்திக்கிற்கு சம அளவில் அவரும் இடம் கொடுக்கப்பட்டிருக்கும். கதையின் கருவும், அதற்கான எமோஷனல் பின்னணியும்தான் பிரதானமாக இருக்கும். கல்லூரி மாணவர்கள், அலெக்ஸாண்டர் என படத்தில் வரும் சின்ன சின்ன கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் இருக்கும். போலோ படத்தை எப்படி உருவாக்கி இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஏற்கனவே விக்ரம் வேதா ஹிந்தி ரிமேக்கில் ஓரளவு முழுமையாக எடுத்திருந்தாலும், தமிழில் இருந்த ஏதோ முக்கியமான ஒன்று மிஸ்ஸிங் என்றே விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டது.

எனினும் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் திரையரங்குகளில் வெளிவந்தப் பின்னரே படம் எவ்வாறு உருவாகியுள்ளது என தெரியவரும்.