விக்ரம் மகன் துருவ் தெலுங்குப் படத்தில் அறிமுகமாக இருப்பதாக தகவல் கசிந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான நடிகர் விக்ரம். அவர் நடிக்க இருக்கும் படங்களின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப அவரது உடல் அமைப்பை மாற்றுவது முக தோற்றத்தை மாற்றுவது என விக்ரம் எடுக்கும் முயற்சிகள் தமிழ் சினிமாவில் தனித்துவமானவை. ‘ஐ’ படத்தில் அவர் செய்த சாதனையை பார்த்து திரை ரசிகர்கள் பலரும் மிரண்டு போயினர். இப்போது அதற்கு நேரெதிராக உடலை கட்டுக் கோப்பாக்கி ‘சாமி ஸ்கொயர்’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதற்காகவே அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழ் சினிமாவில் இவர் கதாநாயகனாக நடித்து கொண்டிருக்கும் போதே அவரது மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாக இருக்கிறார். அவர் நடித்து வரும் ‘வர்மா’ படத்தினை இயக்குநர் பாலா இயக்கி வருகிகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி ப்ளாக்பாஸ்டர் ஹிட் ஆன ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் ரீமேக். ஆகவே இதற்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்நிலையில் துருவ், தெலுங்கு படம் ஒன்றில் அறிமுகமாக இருப்பதாக பேச்சுக்கள் அடிபட ஆரம்பித்திருக்கின்றன. இந்தப் படத்தினை இயக்குநர் சேகர் கம்முலா இயக்க இருக்கிறார். இவரின் அடுத்த படத்தில்தான் துருவ் இணைய இருப்பதாக தெரிகிறது. சேகர் கம்முலா டோலிவுட் சினிமா வட்டாரத்தில் நம்பிக்கை மிக்க இயக்குநர். தேசிய விருது வாங்கியவர். ‘லீடர்’, ‘அனாமிகா’, ’லைஃப் இஸ் பியூட்டிஃபுல்’ என பல படங்களை தந்தவர். இவரது இயக்கத்தில் நடித்த ராணா டகுபதி, நிகில், சாய் பல்லவி என பலரும் தெலுங்கில் பெரிய நடிகர்களாக வலம் வருகின்றனர். ஆகவே திறமையான இயக்குநர் கையில் தன் மகன் நடிக்க இருப்பது குறித்து விக்ரம் மகிழ்ச்சியில் இருக்கிறார். துருவின் தெலுங்குப் பட அறிவிப்பு அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் எனத் தெரிகிறது.