actress vijayakumari விஜய்
சினிமா

“DMK தோற்றது தலையில் இடி விழுந்த மாதிரி இருக்கு! Vijay அமைதியா இருந்து..” - நடிகை விஜயகுமாரி பேட்டி

“விஜய் முதல்வரானதும் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது எல்லாமே ஏற்கெனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள்தான். அதேபோல், ஃபாரினர் மாதிரி கோட் சூட் போட்டுக்கிட்டு..” - நடிகை சி.ஆர் விஜயகுமாரி பேட்டி

வினி சர்பனா

“எஸ்.ஏ. சந்திரசேகர் புரட்சிகரமான இயக்குநர். கதை, வசனம் என எல்லாவற்றிலும் அதை பிரதிபலித்திருப்பார். அவருடைய மகன் விஜய்க்கு அந்த புரட்சிகர சிந்தனை எப்படி இல்லாமல் இருக்கும்? அவர், முதல்வர் ஆனது பாராட்டுக்குரியது. ஆனால்” என்று பாராட்டுகளுடன் சஸ்பென்ஸ் வைத்துப் பேசுகிறார், நடிகை சி.ஆர் விஜயகுமாரி.

அண்ணா, கலைஞர், எம்.ஜி,ஆர், வி.என் ஜானகி, ஜெயலலிதா வரிசையில் மீண்டும் திரைத்துறையிலிருந்து ஒரு முதல்வர் என போட்டியிட்ட முதல் தேர்தலிலேயே யாருமே எதிர்பார்க்காத ட்விஸ்ட்டாக ஆட்சியைப் பிடித்து பிரமிக்க வைத்திருக்கிறார் நடிகர் விஜய். இந்தியாவிலேயே முதன்முதலாக நடிகர் ஒருவர் முதல்வர் (எம்.ஜி.ஆர்) ஆனது நம் தமிழ்நாட்டில்தான்!

அதேபோல, இந்தியாவில் முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினர் ஆன நடிகர் என்ற சிறப்புக்குரியவர் ‘லட்சிய நடிகர்’ எஸ்.எஸ்.ஆர் என அழைக்கப்பட்ட எஸ்.எஸ் ராஜேந்திரன். முதல்வர் ஜோசப் விஜயின் அமைச்சரவைக்கு திரைத்துறையிலிருந்தே ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பியுள்ள நிலையில், எஸ்.எஸ். ராஜேந்திரனின் மனைவியும், விஜயுடன் இரண்டு படங்களில் நடித்ததோடு அவருடைய அரசியல் வருகையின்போதே எதிர்ப்பு தெரிவித்தவரும் பழம்பெரும் நடிகையுமான சி.ஆர்.விஜயகுமாரியிடம் பேசினேன். ”விஜய் அரசியலில் நீந்தி வருவது கஷ்டம்னு ஏற்கெனவே சொன்னீங்க. ஆனா, விஜய் அரசியலில் நீந்தி, முதல்வரே ஆகிட்டாரே?” என்றோம்,

எஸ்.எஸ்.ஆர் - விஜயகுமாரி

“நான் அப்படி சொன்னது உண்மைதான். ஆனால், அதையெல்லாம் தாண்டி விஜய் இன்னைக்கு முதல்வராக ஜெயிச்சது ரொம்ப சந்தோஷமாவும் ஆச்சர்யமாவும் இருக்கு. ஒரு தாயுள்ளத்தோடு, விஜய் இன்னும் பல சாதனைகள் செய்யணும்னு ஆசீர்வாதம் பன்றேன். விஜயோடு ’வசந்த ராகம்’, ’பூவே உனக்காக’ என இரண்டு படங்களில் நடிச்சிருக்கேன். முதல் படம் அவரோட அப்பா எஸ்.ஏ.சியின் இயக்கம். அப்போதிலிருந்தே, அவங்க குடும்பத்தோட நல்ல நட்பு.

’பூவே உனக்காக’ படத்துல விஜய்க்கு பாட்டியா நடிச்சேன். விஜய் அம்மா ஷோபா எனக்கு போன் பண்ணி, என் மகனை நல்லா பார்த்துக்கோங்கன்னு சொல்வாங்க. ஆனா, விஜய் ஷூட்டிங் ஸ்பாட்ல வெரி சைலண்ட். யார்கிட்டேயும் பேசமாட்டார். என்கிட்ட கொஞ்சம் பேசுவார். நம்பியார் இதைப் பார்த்து ‘என்கிட்டல்லாம் பேசமாட்றார். உன்கிட்ட மட்டும் எப்படி பேசுறார்’ன்னு கிண்டலடிச்சுக்கிட்டிருப்பார்.

அப்படிப்பட்ட அமைதியான, விஜய் அரசியலுக்கு வந்து பேசுறது எல்லாமே பிரமிப்பா இருக்கு. அவருடைய வெற்றியை நான் அதிர்ஷ்டமாகத்தான் பார்க்குறேன். அதேநேரம், அவரது ஆட்சி ’குருவி தலையில் பனங்காய் இருப்பதுபோல் உள்ளது. இந்த பனங்காய் பழுக்குமா, விழுமா’ என்பதெல்லாம் காலம்தான் பதில் சொல்லும். ஏன்னா, அரசியலில் பயணிப்பது ரொம்ப கஷ்டம்” என்றவரிடம். ”முதல்வராக விஜயின் செயல்பாடுகளை எப்படி பார்க்குறீங்க? அமைச்சர் ராஜ்மோகனுக்கு திரைப்படத் துறையை ஒதுக்கியதற்கு நடிகர் சங்கத்தலைவர் விஷால் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறாரே?” என்றோம்.

முதல்வர் ஜோசப் விஜய்

“முதல்வராக பொறுப்பேற்றதும் விஜய் சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். அது எல்லாமே ஏற்கெனவே இருந்தவர்கள் செய்த விஷயங்கள்தான். புதிதாக என்ன செய்கிறார் எனப் பொறுத்திருந்து பார்ப்போம். மற்றபடி, அவர்கிட்ட பிடிச்ச விஷயம்னா அமைதிதான். அமைதியா இருந்து, அரசியலில் வீரியத்தோடு காரியத்தை சாதிச்சுட்டார்.

அவர்கிட்ட பிடிக்காத விஷயம்னா, கோட்-சூட் போடுறதுதான். இது தமிழ்நாடு. நம்மோட பெருமையே வேஷ்டி-சட்டைதான். ஃபாரினர் மாதிரி கோட் சூட் எல்லாம் போட்டுக்கிட்டு வர்றார். அது, எனக்கு சுத்தமா பிடிக்கல. வேஷ்டி-சட்டை போட்டுக்கிட்டு ஜம்முனு வந்து முதல்வர் நாற்காலியில உட்காரணும். அதுதான் பெருமை.

அதேமாதிரி, நானெல்லாம் எந்த எக்ஸ்பீரியன்ஸும் இல்லாமல் நடிக்க வந்தேன். ’பூம்புகார்’ படத்தில் கண்ணகியா நடிச்சு நல்ல நடிகை என பெயர் வாங்கினேன். அந்த மாதிரி, அமைச்சர் ராஜ்மோகன் எக்ஸ்பீரியன்ஸ் ஆவதற்கு கொஞ்சம் கால அவகாசம் கொடுக்கலாம். விஜயும் புதிய அமைச்சர்களும் சட்டமன்றத்துல காலடி எடுத்து வெச்சுட்டாங்க. அவங்க, மக்கள் மனசுல இனிமேதான் ஜெயிச்சுக் காட்டணும். நீங்க நீங்களாவே இருங்க. யாருக்கும் அடிபணிய வேண்டாம். இதுதான் அவங்களுக்கு நான் கொடுக்கிற அட்வைஸ்” என்று அழுத்தமாக பேசியவரிடம், “உங்கள் கணவர் எஸ்.எஸ். ராஜேந்திரன்தான் இந்தியாவிலேயே முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன நடிகர். பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற தலைவர்கள் உங்கள் குடும்ப நண்பர்கள். தமிழ்நாட்டில், திராவிடக் கட்சிகள் ஆட்சியில் இல்லாதது எப்படி உள்ளது?” எனக் கேட்டோம்.

“நம்ப மண் திராவிட மண். நான் திராவிட மகள். திராவிடம் இல்லைன்னா தமிழ்நாட்டுக்கு எந்த வளர்ச்சியும் கிடையாது.

திமுக தலைவர் மு.க ஸ்டாலின்

பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர் உள்ளிட்ட தலைவர்கள் எங்க குடும்ப நண்பர்கள்தான். ஜெயலலிதாவோடும் நல்ல நட்பு இருந்தது. அப்படி இருக்கையில், இரண்டு திராவிடக் கட்சிகளும் ஆட்சியில் இல்லாததைப் பார்ப்பதற்கே மனசு வலிக்குது. மிக முக்கியமா, திமுகவின் தோல்வி தலையில் இடி விழுந்ததுபோல் இருக்கு. எதனால் திமுக தோற்றது என்பது புரியாத புதிராகவே உள்ளது. கலைஞர் ஆட்சி கவிழ்ந்ததெல்லாம் இருக்கு. ஆனா, இப்படிப்பட்ட தோல்வி என்னால் நம்பவே முடியல.

மிக முக்கியமா, ஸ்டாலினின் தோல்வி கிணத்துல விழுந்தமாதிரி ரொம்ப அதிர்ச்சியாகவும் வேதனையாகவும் இருந்துச்சு. திமுக தோல்வியைவிட ஸ்டாலின் தோற்றதுதான் எனக்கு கஷ்டத்தைக் கொடுத்துச்சு. விஜய் வரணும்னு இருந்திருக்குபோல!

புதுசா யார் வேணாலும் அரசியலுக்கு வரலாம்; ஆட்சியைப் பிடிக்கலாம். ஆனால், பெரியார், அண்ணா கொள்கைகளை உள்வாங்கிக்கொண்ட அரசியல்வாதிகளுக்குத்தான் அரசியல்னா என்ன? நிர்வாகம்னா என்னன்னு தெரியும்.

சி.ஆர் சரஸ்வதி

திமுக பெரியாரின் கொள்கைகளை உள்வாங்கியக் கட்சி. அந்தக் கட்சிக்கு இப்படியொரு நிலைமை வந்திருக்கக்கூடாது. திராவிடம் இல்லாம தமிழ்நாடு என்ன ஆகுமோ என்கிற கவலைதான், இப்போ என்னை சூழ்ந்திருக்கு!” என்கிறார் ஆதங்கத்துடன்.