‘செக்க சிவந்த வானம்’ படத்தின் பாடல்களை நடிகை த்ரிஷா வெகுவாக பாராட்டியுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, சிம்பு, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் செக்க சிவந்த வானம். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.
இந்நிலையில் செக்க சிவந்த வானம் படத்தின் இரண்டு பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. செக்க சிவந்த வானத்தின் பாடல்களை கேட்டு வியந்து போயிருக்கிறார் நடிகை த்ரிஷா. இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை த்ரிஷா, ஒவ்வொரு முறையும் எப்படி இவ்வளவு திறமையாக செய்ய முடிகிறது ஏ.ஆர்.ரஹ்மான் என பாராட்டியுள்ளார். பொதுவாக ஏ.ஆர்.ரஹ்மானின் இசைக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம். அதேபோல வைரமுத்துவின் எழுத்துக்கு அடிமையானவர்களும் பலருண்டு. இவர்கள் இருவரும் இணைந்த படங்களின் பாடல்கள் செம ஹிட்டடித்து வரலாறு. தற்போது இந்த கூட்டணியில் உருவாகியுள்ள செக்க சிவந்த வானம் படத்தின் பாடல்களையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.