சினிமா

உண்மை சம்பவக் கதையில் நடிகை த்ரிஷா - புதியப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்

சங்கீதா

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, முதன்மை கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடிக்கும் புதியப் படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியுள்ளது.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான த்ரிஷா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு திரையுலகிலும் கலக்கி வருபவர். வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து தனக்கென தனி முத்திரை பதித்துள்ள த்ரிஷா, தற்போது முதன்மை கதாபாத்திரப் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு, கொரோனா காரணமாக நேரடியாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியான திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’.

இதனைத் தொடர்ந்து மணிரத்னத்தின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவாகி வரும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் குந்தவை தேவி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் வருகிற செப்டம்பர் 30-ம் தேதி வெளியாகிறது. இந்நிலையில், 2000-ம் ஆண்டுக்கு முன்னதாக மதுரையில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் புதியப் படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் துவங்கியுள்ளது. இந்தப் படத்தில் த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, மியா ஜார்ஜ், ‘சார்பட்டா பரம்பரை’ சந்தோஷ் பிரதாப் மற்றும் ‘டான்சிங் ரோஸ்’ சபீர், வேல ராமமூர்த்தி. எம்.எஸ். பாஸ்கர், விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அருண் வசீகரன் இயக்குகிறார். ஏஏஏ சினிமா தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் துவங்கியுள்ள நிலையில், 50 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

பழிவாங்கும் கதையம்சம் கொண்டதால் ‘தி ரோடு’ என்ற பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். நாகூரான் எடிட்டிங் பணியை மேற்கொள்ள, கே.ஜி. வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படங்களை தவிர ‘பிருந்தா’ என்ற வெப்சீரிஸிலும், ‘சதுரங்க வேட்டை 2’, மோகன்லாலின் ‘ராம்’, ‘ராங்கி’, ‘கர்ஜனை’ உள்ளிட்ட படங்களிலும் நடிகை த்ரிஷா நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.