சினிமா

இன்றும் என்றும் மறக்க முடியாத 'மயிலு' ஸ்ரீதேவி!

JustinDurai

தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்த நடிகைகளின் பட்டியலை புரட்டிப் பார்த்தால் அதில் நடிகை ஸ்ரீதேவிக்கு  என்றும் தனி இடம் உண்டு. தமது அசாத்திய நடிப்பாலும், நளினமான அழகாலும் ஏராளமான ரசிகர்களை கட்டிப்போட்டவர். தமது நான்காவது வயதில், 1969-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ‘துணைவன்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, முருகன் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார் ஸ்ரீதேவி.

1976-ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான ‘மூன்று முடிச்சு’ படத்தின் மூலம் கதாநாயாகி அவதாரம் எடுத்தார். பாரதிராஜாவின் ‘16 வயதினிலே’ படத்தில் மயில் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார் ஸ்ரீதேவி.

தொடர்ந்து 1982-ஆம் ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் கமலஹாசனுடன் ‘மூன்றாம் பிறை’ படத்தில் நடித்த ஸ்ரீதேவி, ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். இதனையடுத்து ரஜினிகாந்த், கமலுடன் ஏராளமான படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் கோலோச்சினார்.

அதே நேரத்தில் பாலிவுட் படங்களிலும் கவனம் செலுத்திய ஸ்ரீதேவி, பாலிவுட் திரையுலகின் பெண் சூப்பர்ஸ்டார் என்ற பெருமையையும் பெற்றார்.

கடந்த 2018 பிப்ரவரி மாதம் துபாய் சென்றிருந்தபோது குளியலறை தொட்டியில் மூழ்கி உயிரிழந்தார். இன்று ஸ்ரீதேவியின் 57 பிறந்தநாளை முன்னிட்டு சமூக வலைத்தளங்களில் பலரும் அவரது நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.  

அசாத்தியமான நடிப்பையும் மிஞ்சி திரைப்படங்களில் கதாபாத்திரமாகவே வாழ்ந்த ஸ்ரீதேவியை அவ்வளவு எளிதில் திரையுலகம் மறந்துவிடாது என்பது நிதர்சனமான உண்மை.