இன்ஸ்டாகிராமில் வைரலான புகைப்படம் குறித்து நடிகை சமந்தா விளக்கம் அளித்துள்ளார்.
திருமணத்திற்குப் பிறகும் படு பிசியாக திரையுலகில் வலம் வருகிறார் நடிகை சமந்தா. தமிழில் அவரது நடிப்பில் ஒரே நேரத்தில் வெளியான ‘சீமராஜா’, ‘யுடர்ன்’ ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அதே வேளையில் அவர் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட படு கவர்ச்சியான புகைப்படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது. சமந்தாவும், அவரது கணவர் நாக சைதன்யாவும் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளனர். அங்குள்ள Ibiza தீவில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
தனது கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமந்தா தனது இன்ஸ்டாகிராமில் வழக்கம் போல் பதிவேற்றியுள்ளார். ஆனால் அந்தப் படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் பொங்கி எழுந்துவிட்டனர். ‘திருமணத்திற்குப் பின் ஒரு பெண் இப்படியா உடை அணிவது?’ என்பன போன்ற வசைகளை அவர் வாங்கிக்கட்டிக் கொள்ள நேர்ந்தது. மேலும் சிலர் ‘நாக சைதன்யா குடும்பத்திற்கு இப்படியொரு மருமகளா?’ என விமர்சிக்க தொடங்கினர். ஆனால் அதற்கு சமந்தா எந்தப் பதிலும் கூறாது இருந்து வந்தார். நிலைமை உச்சத்திற்கு சென்று படங்கள் வைரலானதும் இப்போது அதற்கு பதிலளித்துள்ளார்.
அவரது அதே ஊடகத்தில், “திருமணத்திற்குப் பிறகு என்னை இப்படித்தான் உடை அணிய வேண்டும் என்று சொல்லும் எல்லோருக்கும் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்” என கூறிப்பிட்டு வேறொரு படத்தை பதிவிட்டிருக்கிறார். அதில் நடுவிரலை உயர்த்திக் காட்டும் காட்சி இடம்பெற்றுள்ளது. இப்போது அந்தப் பதிலும் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.