தோல்வி மற்றும் தனிமையிலிருந்து மிகப்பெரிய வெற்றிபெற்ற உணர்வு கிடைத்துள்ளதாக நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தனது வாழ்க்கை மற்றும் தொழில் பயணத்தின் சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, அவரது படங்களின் தோல்விகள் மற்றும் தனிமை எப்படி அவருக்கு உதவியது என்பதைப் பற்றி விளக்கியுள்ளார். வெள்ளிக் கிழமைகளில் வெளியாகும் தனது படங்களின் முடிவால், மகிழ்ச்சி சிதைக்கப்பட்டதாகவும், ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தனது படங்களே வெளியாகாமல் இருந்தாலும், இதுவரை இல்லாத அளவிற்கு மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
சினிமா உலகில், நடிகர்களுக்கு குறுகிய ஆயுள் மட்டுமே இருப்பதாக குறிப்பிட்டுள்ள சமந்தா, நட்சத்திரமாக கிடைக்கும் புகழ் மற்றும் வெற்றிகளுக்கு, முயற்சி மட்டுமே காரணம் இல்லை எனக் கூறியுள்ளார். 100 பிரச்னைகள் இருப்பதாக பலரும் நினைக்கும் சூழலில், உடல்நலம் சார்ந்த பிரச்னைகள் வரும்போது, அது ஒன்று மட்டுமே நமக்குப் பிரச்னையாக தெரியும் என்று கூறிய சமந்தா, தனது பிரச்னைகள் மூலம் கற்றுக்கொண்டதை விவரித்துள்ளார். விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது முக்கியம் அல்ல, விளையாட்டைத் தொடர்வதுதான் முக்கியம் என்றும் கூறியுள்ளார்.