சினிமா

’எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு’: திருமணத்தை நிறுத்திய ஹீரோயின் விளக்கம்!

’எல்லாத்துக்கும் ரெண்டு பக்கம் இருக்கு’: திருமணத்தை நிறுத்திய ஹீரோயின் விளக்கம்!

webteam

நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் தனது திருமணத்தை நிறுத்தியுள்ள நடிகை ராஷ்மிகா திடீரென அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கன்னடத்தில், கிரிக் பார்ட்டி, அஞ்சனி புத்ரா, ஜமக் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ராஷ்மிகா மந்தனா. இவர் தெலுங்கில் விஜய தேவரகொண் டாவுடன் நடித்த ‘கீதா கோவிந்தம்’ படம் ஹிட்டானது. இதையடுத்து அவருக்கு புகழ் கூடியது. வாய்ப்புகளும் குவிகின்றன. கடந்த மாதம் ரிலீஸ் ஆன இந்தப் படத்தில் அவர் ஹீரோவுடன் நெருக்கமான காட்சிகளிலும் நடித்திருந்தார். 

இதற்கிடையே இவரும் ’கிரிக் பார்ட்டி’ பட ஹீரோ ரக்‌ஷித்தும் காதலித்து வந்தனர். இதையடுத்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். அதன்படி கடந்த வருடம் ஜூலை மாதம் பெங்களூரில் பிரமாண்டமாக நிச்சயதார்த்த விழா நடந்தது. திருமணம் நடக்க இருக்கிற நிலையில் இன்னொரு ஹீரோவுடன் ராஷ்மிகா நெருக்கமாக நடிக்கலாமா? என்று சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக அவரை கடுமையாக விமர்சித்திருந்தனர்.

இந்நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக ரக்‌ஷித்தும் ராஷ்மிகாவும் பிரிந்துவிட்டதாகவும் திருமணம் நின்று போனதாகவும் செய்தி வெளியானது. ராஷ்மிகா தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த இருப்பதாகவும் இதனால் இப்போது திருமணம் செய்துகொள்ளமுடியாது என்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டதாகவும் கூறப்பட்டது. இதை கன்னட நடிகர் ரக்‌ஷித்தும் உறுதி செய்திருந்தார்.

 ராக்‌ஷிதா, நடித்துள்ள ’தேவதாஸ்’ என்ற தெலுங்கு படம் இந்த மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது. இதையடுத்து, டியர் காம்ரேட் என்ற தெலுங்கு படத்திலும் எஜமானா, விருத்ரா ஆகிய கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன்மீதான விமர்சனத்துக்கு விளக்கம் அளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இது என் மீதான விமர்சனத்துக்கு பதில் ஏதும் சொல்லாமல் இருந்ததற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விவகாரத்தில் பல்வேறு கதைகள், கருத்துகள், விமர்சனங்கள் வெளியாகி இருக்கின்றன. என்னை பற்றி சித்தரிக்கப்பட்ட விஷயங்கள் என்னை அதிகமாக காயப்படுத்தின. இதற்காக உங்களை குற்றம் சொல்லவில்லை. நானும் சரி, ரக்‌ஷித்தும் சரி, இல்லையென்றால் இன்டஸ்ட்ரியில் யாராக இருந்தாலும் இது போன்ற கதைகளைத் தவிர்த்துவிட்டு போய்விட முடியாது. இருந்தாலும் நாணயத்தை போல எல்லா கதைகளுக்கும் இரண்டு பக்கம் உண்டு என்பதை சொல்ல விரும்புகிறேன். கன்னடம், தெலுங்கு மொழி படங்களில் தொடர்ந்து நடிப்பேன்’ என்று தெரிவித்துள்ளார்.