நீண்ட இடைவெளிக்குப்பின் ஹாரர் த்ரில்லர் மூலம் அஜித், விக்ரம் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்த பிரியங்கா த்ரிவேதி ரீஎன்ட்ரி ஆகிறார்.
ஜேஎஸ்கே பிலிம் கார்பொரேஷன் தயாரிப்பில் ஹாரர் த்ரில்லராக உருவாகியுள்ள படம் ‘மம்மி’. இருபது வயதான இளைஞர் லோஹித் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். இவர் குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்டவர். இதன் கதாநாயகியாக நடிகை பிரியங்கா த்ரிவேதி நடித்துள்ளார். அஜித், விக்ரம் ஆகியோருடன் கதாநாயகியாக நடித்த இவர் நீண்ட இடைவெளிக்குப்பிறகு பிறகு ரீஎன்ட்ரி ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகளாக பேபி யுவினா நடிக்கிறார். பா.விஜய்யின் பட்டர்பிளை, அஜித்தின் வீரம் என பல படங்களிலும் நடித்தவர் பேபி யுவினா.
கோவாவில் வசிக்கும் ஒன்பது மாத கர்ப்பிணியான தாய்க்கும் அவரது ஆறுவயது மகளுக்கும் நடக்கும் நிகழ்வுகள்தான் இந்தப்படத்தின் கதை. முற்றிலும் மாறுபட்ட பாணியில் எமோஷனல் ஹாரர் படமாக இந்தப்படம் உருவாகி இருக்கிறது. ‘ரிச்சி’, ‘நிமிர்’ படங்களில் இசையமைத்துள்ள அஜனீஸ் லோகநாத் இதற்கு இசையமைக்கிறார். வேணு ஒளிப்பதிவு செய்கிறார். ரவிச்சந்திரன் படத்தொகுப்பை கவனிக்கிறார். மாயா, துருவங்கள் பதினாறு, டிக் டிக் டிக் உட்பட பல படங்களில் சிறப்பான பங்களிப்பை வழங்கிவரும் ‘சிங்க் சினிமா’ ஒலி வடிவமைப்பிற்கான பொறுப்பை ஏற்றுள்ளது.
படம் பற்றி இயக்குனர் லோஹித் கூறுகையில், “கோவாவில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் இப்படம் தயாராகியுள்ளது. மிகக்குறைந்த கதாபாத்திரங்களை கொண்டு பாட்டு, சண்டை, காமெடி இல்லாமல் இது தயாராகியுள்ளது. இந்தப் படத்திற்காக கோவாவில் 3௦ லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்ட செட் போட்டு படமாக்கினோம்” என்றார்.