கோவா சர்வதேச திரைப்பட விழா நிறைவடைந்தது. இதில் சிறந்த நடிகை விருது நடிகை பார்வதிக்கு வழங்கப்பட்டது.
சர்வதேச இந்திய திரைப்பட விழா ஒவ்வொரு ஆண்டும் கோவாவில் நடத்தப்படுவது வழக்கும். இந்த ஆண்டு, கடந்த 20-ம் தேதி விழா தொடங்கியது. 48-வது திரைப்பட விழாவான இதில் சுமார் 200 படங்கள் இந்த விழாவில் திரையிடப்பட்டன. இறுதி நாளான நேற்று, அமிதாப் பச்சன், சல்மான் கான், கேத்ரினா கைப், ஹூமா குரேஸி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் சிறந்த கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மலையாளத்தில் வெளியான, டேக் ஆப் என்ற படத்தில் நடித்ததற்காக நடிகை பார்வதிக்கு சிறந்த நடிகை விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் திரையிட மலையாள படமான எஸ்.துர்கா, மராத்தி படமான நியூட் ஆகியவை தேர்வு செய்யப்பட்டிருந்தன. இந்தப் படங்களை திரையிட மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் மறுத்துவிட்டது. இதையடுத்து எஸ் துர்கா படத்தின் இயக்குனர் சசிதரன் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றம் திரையிட உத்தரவிட்டிருந்தது. இருந்தும் நேற்று திரையிடப்படவில்லை. தணிக்கை தொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வந்தால் மட்டுமே திரையிட அனுமதிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது.