இயக்குநர் சேரன் இயக்கிய 'தவமாய் தவமிருந்து' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பத்மப்ரியா, 'பட்டியல்', 'மிருகம்', 'சத்தம் போடாதே', 'பொக்கிஷம்' மற்றும் பல மலையாளத் திரைப்படங்களில் நடித்துப் பிரபலமானார். சினிமாவில் அவர் பிஸியாக இருந்தபோதே, கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜாஸ்மின் ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த நிலையில், அவர் தனது 45-ஆவது வயதில் தாயாகியுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தியை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பத்மப்ரியா தனது கர்ப்பகாலத்தையோ அல்லது குழந்தை பிறந்த செய்தியையோ உடனடியாக வெளியிடாமல் ரகசியமாக வைத்திருந்தார்.
குழந்தை பிறந்து 1 வருடம் நிறைவடைந்ததையொட்டி (முதல் பிறந்தநாள்), குழந்தையின் பிஞ்சு கை அவரது ஆடையைப் பிடித்துள்ள கருப்பு-வெள்ளை புகைப்படத்தைப் பகிர்ந்து, ’365 Days of Life’ எனக் குறிப்பிட்டு அந்தப் பதிவை வெளியிட்டுள்ளார். ஆனால், அதில் குழந்தை குறித்த விவரங்களை வெளியிடவில்லை. இந்த நிலையில் அவர்க்கு நடிகைகள் அபிராமி, அஞ்சலி மேனன், பார்வதி திருவோத்து, நித்யா மேனன், ரிமா கல்லிங்கல் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, நடிகை அபிராமி தெரிவித்த வாழ்த்துக்கு பத்மப்ரியா "We have this because of you" என்று பதிலளித்திருப்பது சமூக வலைத்தளங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது. முன்னதாக, அவர் ‘உங்களுக்கும் உங்கள் குழந்தைக்கும் என் அன்பு தெரியும்’என வாழ்த்து தெரிவித்திருந்தார்.