சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் ராதாரவியை கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கிய திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நடிகை நயன்தாரா நன்றி தெரிவித்துள்ளார்.
‘கொலையுதிர் காலம்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பங்கேற்றிருந்த ராதாரவி பேசிய சில கருத்துகள் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின், ராதாரவியை தற்காலிகமாக கட்சியில் நீக்கியுள்ளதாக தெரிவித்திருந்தார். இதுதவிர நடிகர் சங்கம் சார்பிலும் ராதாரவிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நடிகை நயன்தாரா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ராதாரவியை கட்சியில் இருந்து நீக்கியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு அவர் நன்றிகளை தெரிவித்துள்ளார். அத்துடன் தன்னை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ராதாரவியை விசாரிக்க குழு அமைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். பெண்களை மிகவும் இழிவாக பேசுபவர்களை பற்றி மிகவும் வருந்துகிறேன். மூத்த நடிகரான ராதாரவி, இளம் தலைமுறையினருக்கு வழிகாட்டுபவராக இருந்திருக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி விசாகா கமிட்டி அமைக்க நடிகர் சங்கம் நடவடிக்கை எடுக்குமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனதால், ராதாரவி கீழ்த்தரமாக பேசி பிறர் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கிறார் என்றும் நயன்தாரா கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், கடவுள் பாக்கியத்தில் திரைத்துறையில் வெற்றிகரமாக இருக்கும் தன் மீது இப்படி விமர்சனங்களை முன்வைப்பது வருத்தம் அளிப்பதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.