சினிமா

தோற்றத்தை குறித்து சமூக ஊடங்களில் வெளியான விமர்சனங்கள் - நயன்தாரா கொடுத்த க்யூட் பதில்

Sinekadhara

தனது தோற்றத்தை குறித்து சமூக ஊடங்களில் வெளியான விமர்சனங்களுக்கு நடிகை நயன்தாரா சமீபத்தில் அளித்த நேர்க்காணல் ஒன்றில் விளக்கமளித்துள்ளார். 

நடிகர்களுக்கு இணையான புகழ் மற்றும் அந்தஸ்தை தமிழ் திரையுலகில் பெற்றிருப்பவர் நடிகை நயன்தாரா. பிரபல நடிகையான இவர் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்குவது இணையங்களில் பேசுபொருளாவதுண்டு. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘கனெக்ட்’ திரைப்பட லுக்கில் வெளியான புகைப்படம் அவருடைய ஒன்று இணையங்களில் பரவி வைரலானது. அதில் நயன்தாரா மெலிந்த, வயதான தோற்றத்துடன் இருப்பதை பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்தனர்.

தற்போது ‘கனெக்ட்’ திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நடிகை நயன்தாரா கொடுத்த ஒரு நேர்க்காணலில் தன்மீது வைக்கப்பட்டுவரும் விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். அதில், “கனெக்ட் திரைப்படத்தின் புகைப்படம் ஒன்றை சோகமான ஸ்மைலியுடன் சமூக ஊடகத்தில் ஒருவர் பகிர்ந்திருந்தார். ஆனால் அது படத்தில் சோகமான சீன்தான். சோகமான சீனில் எப்படி பள்ளிச்சென்று சிரித்துக்கொண்டு இருக்கமுடியும்? அவர்களுக்கு ஒல்லியாக இருந்தாலும், குண்டாக இருந்தாலும் என எல்லாமே பிரச்னைதான். அது எப்போதும் இருக்கக்கூடியதே.

ஆனால் நான் என்ன நினைக்கிறேன் என்றால், என்னுடைய டைரக்டர்கள் என்ன சொல்கிறார்களோ, அந்த கேரக்டர்களை முழுமையாக்கவே முயற்சிபண்ணுகிறேன்.

இந்த திரைப்படத்தில் நான் 15 வயது பெண்ணுக்கு அம்மாவாக நடித்திருக்கிறேன். அதில், 15 வயது பெண்ணுக்கு போட்டியாக நான் இருக்கக்கூடாது. அதேசமயம் நரைத்த தலையுடன் வரவேண்டிய அவசியமும் இல்லை. கனெக்ட் திரைப்படத்தில் அந்த கதாபாத்திரம் சந்திக்கிற பிரச்னைகளுக்கு ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எது பண்ணினாலும் தவறு என்றாகிவிடுகிறது. அது நல்லதல்ல.

ஹீரோயின் என்றாலே பளிச்சென மேக்கப் போட்டுக்கொண்டு இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். நான் அதுபோல் நடித்த நாட்களும் இருக்கிறது. படத்திற்கு ஏற்றவாறுதான் தோற்றத்தையும், நடிப்பையும் கொடுக்கமுடியும். நான் எப்போதும் எனது டைரக்டர் என்ன சொல்வாரோ அதைத்தான் செய்வேன். என்னை பிடிக்காதவர்கள் என்னைகுறித்து ஏதாவது ஒன்றை எழுதத்தான் செய்வார்கள். அதை நான் மனதுக்குள் எடுத்துக்கொள்கிறதில்லை” என்று கூறியுள்ளார்.