நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், தனது வீடியோக்கள் மற்றும் கருத்துகள் மூலம் அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி பேசுபொருளாவார். இந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்பு, பட்டியல் இன மக்கள் மீது அவதாறூன கருத்துகளை கூறியிருந்தார். மீரா மிதுனின் இந்த கருத்து சமூகவலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், பலரும் அவரை கடுமையாக விமர்சித்தனர். மேலும், அவர் மீது பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவர் மீது 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்தப் புகார் குறித்து விசாரித்த சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரைக் கைது செய்தனர். பின்னர், அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். ஆனால், வழக்கு விசாரணையின்போது மீரா மிதுன் தொடர்ந்து ஆஜராகாததால் கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத அளவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், டெல்லி போலீசார் மூலம் மீரா மிதுன் கண்டுபிடிக்கப்பட்டு அங்குள்ள காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டார். இந்த நிலையில் அவரை நேற்று (ஆகஸ்ட் 11) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது அவர் மனநல காப்பகத்தில் இருப்பதாக மத்திய குற்றப்பிரிவு காவல் துறை தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ”மிகுந்த மன அழுத்தத்தில் இருப்பதால் மீரா மிதுன் டெல்லியில் உள்ள மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் அவரை சென்னை அழைத்து வர இயலவில்லை. உடல்நிலை மேம்பட்டு, அவர் பயணம் செய்யலாம் என மருத்துவர்கள் சான்றளித்தவுடன் மீரா மிதுனை நீதிமன்றத்தில், ஆஜர்படுத்துகிறோம்'' என்று குற்றப்பிரிவு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வழக்கின் விசாரணையை தள்ளிவைத்து உத்தரவிட்டது.