சினிமா

நேற்று விஜய் சேதுபதி இன்று மீனா - ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த கௌரவம்

சங்கீதா

விஜய் சேதுபதியைத் தொடர்ந்து நடிகை மீனாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் உட்பட பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி கௌரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஐக்கிய அரபு அமீரக குடிமகன்களாகக் கருதப்படுவார்கள். அதன்படி, பாலிவுட் நடிகர்கள் சஞ்சய் தத், ஷாருக்கான், துஷார் கபூர், ஊர்வசி ரவுதலா உட்பட பலர் இந்த விசாவை பெற்றுள்ளனர்.

இதேபோல் தென்னிந்தியாவைச் சேர்ந்த மம்மூட்டி, மோகன்லால், பிருத்விராஜ், துல்கர் சல்மான், பார்த்திபன், நடிகைகள் மீரா ஜாஸ்மின், த்ரிஷா, அமலா பால், லட்சுமி ராய், காஜல் அகர்வால், பிரணிதா உட்பட பலருக்கு இந்த கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதி இந்த விசாவை பெற்றிருந்தார்.

இந்நிலையில், நடிகை மீனாவுக்கும் இந்த விசா வழங்கப்பட்டுள்ளது. கோல்டன் விசாவை பெற்றுக்கொண்ட நடிகை மீனா, துபாயில் நடக்கும் எக்ஸ்போவில் கலந்துகொண்டார். அங்கு அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த கவுரவத்தை தந்ததற்கு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு நன்றி. துபாய் எக்ஸ்போ 2020-ல் இந்த விசாவை பெற்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளேன்’ என்று மகிழ்ச்சியுடன் மீனா தெரிவித்துள்ளார்.