சினிமா

“அது மட்டும் நடந்திருந்தால் எனது வாழ்க்கை மாறி...’ நடிகை மீனா உருக்கமான பதிவு

சங்கீதா

சர்வதேச உடல் உறுப்பு தான நாளை முன்னிட்டு, நடிகை மீனா உருக்கமான பதிவை தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக ஒருகாலத்தில் திகழ்ந்தவர் நடிகை மீனா. இவரது கணவர் அண்மையில் நுரையீரல் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், கடந்த ஜூன் மாதம் 29-ம் தேதி நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சைக்காக நுரையீரல் கிடைக்காததால் சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த சம்பவம் திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் உள்பட அனைவரையுமே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

தற்போது இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து நடிகை மீனா மெல்ல பழைய நிலைக்கு திரும்பி வருகிறார். இந்நிலையில் இன்று உடல் உறுப்பு தானம் தினம் அனுசரிப்பதை முன்னிட்டு, தனக்கு நேர்ந்த நிலைமை வேறு யாருக்கும் நேரக்கூடாது என்பதற்காக உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அதிரடி அறிவிப்பை நடிகை மீனா வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

அதில், “உயிரைக் காப்பாற்றுவதை விட பெரிய நன்மை எதுவும் இல்லை. உறுப்பு தானம் என்பது உயிரைக் காப்பாற்றும் உன்னதமான வழிகளில் ஒன்று. இது ஒரு வரம். நாட்பட்ட நோயுடன் போராடும் பலருக்கு இது இரண்டாவது வாய்ப்பு. நான் தனிப்பட்ட முறையில் அதனைச் சந்தித்தேன்.

எனது மறைந்த கணவர் சாகருக்கு, நன்கொடையாளர் கிடைத்திருந்தால், எனது வாழ்க்கை மாற்றியமைக்கப்பட்டு, அவர் ஆசிர்வதிக்கப்பட்டவராக இருந்திருப்பார். ஒரு நன்கொடையாளர் 8 உயிர்களைக் காப்பாற்ற முடியும். உடல் உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

நன்கொடையாளர்கள், பெறுநர்கள் மற்றும் மருத்துவர்களுக்கு இடையில் மட்டும் இது சம்பந்தப்பட்டதல்ல. குடும்பம், நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அறிமுகமானவர்களை பெரிதும் இது பாதிக்கிறது. இன்று எனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துக்கொண்டேன். உங்கள் பாரம்பரியத்தை வாழ வைப்பதற்கான சிறந்த வழி. அன்புடன் மீனா சாகர்” என்று பதிவு செய்துள்ளார்.