சினிமா

ஹத்ராஸ் பெண் பாலியல் வன்புணர்வு: அரசை விமர்சித்த "மாஸ்டர்" பட நடிகை

sharpana

உ.பியில் கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்த பட்டியலினப் பெண்ணிற்கு ஆதரவாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ’மாஸ்டர்’ பட ஹீரோயின் மாளவிகா மோகனன் ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராவில் 19 வயது பட்டியலினப் பெண்பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்தார். அவரது உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீஸார் எரியூட்டினர். இது நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

 இந்த கோரச்சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் மட்டுமல்லாமல் நடிகை அனுஷ்கா சர்மா,அக்‌ஷய் குமார், பிரியங்கா சோப்ரா, த்ரிஷா உள்ளிட்ட சினிமா பிரபலங்களும் நீதி கேட்டு வருகிறார்கள். இந்நிலையில்தான், மாளவிகா மோகனன், “முன்பெல்லாம் பாதிக்கப்பட்டவர்களை பாலியல் வன்புணர்வு செய்தவர்கள்தான் எரிப்பார்கள். ஆனால், நாம் இப்போது புதிய இந்தியாவில் இருக்கிறோம்” என்ற பதிவை ஷேர் செய்துள்ளார்.

ஏற்கெனவே, இவர் அமெரிக்காவில் நிறவெறியால் காவலர்களால் கொல்லப்பட்ட ஜார்ஜ் பிளாய்ட் மரணத்தை கண்டித்து நிறவெறிக்கெதிராக வெகுண்டெழுந்தார். அதேபோல, தமிழகத்தில் நடந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் படுகொலையின்போது காவல்துறையைக் கடுமையாக கண்டித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.