indigo, Malavika Mohanan x page
சினிமா

இண்டிகோ விமானத்தின் தாமத சேவை.. நடிகை மாளவிகா மோகனன் குற்றச்சாட்டு

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

Prakash J

இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து நடிகை மாளவிகா மோகனன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

விமானங்களில் சமீபகாலமாகப் பிரச்னைகளும் மோதல்களும் குற்றச்சாட்டுகளும் அதிகரித்து வருகின்றன. அது, சமூக வலைதளங்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர். இவர், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது ஏற்பட்ட மோசமான அனுபவம் குறித்து தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

malavika mohanan

அந்தப் பதிவில், “ஏன் இண்டிகோ விமானச் சேவையில் பத்துக்கு ஒன்பது விமானங்கள் எப்போதுமே தாமதமாகின்றன? விமானத்திற்குள் பயணிகளை அனுமதித்து அவர்களை உட்காரவைக்கிறோம் என்கிற பெயரில் ஒரு மணிநேரத்திற்கு மேல் தாமதப்படுத்தும் புதிய டிரெண்டை உருவாக்குகிறீர்கள். ஒருவேளை, உங்களுக்கு விமானம் புறப்பட தாமதம் என்று அறிவிப்பு வந்தால், பயணிகளை விமானத்தில் அனுமதித்து அமரவைக்கும் அந்த வேலையையும் கொஞ்ச நேரம் கழித்து தாமதமாகவே செய்யலாமே” என அதில் கேள்வி எழுப்பியுள்ளார். மாளவிகாவின் இந்தப் பதிவு, வைரலான நிலையில், அதற்கு பயனர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மாளவிகாவின் பதிவுக்குப் பதிலளித்துள்ள இண்டிகோ விமானச் சேவை நிறுவனம், “எங்கள் விமான நிலையக் குழுவைச் சந்தித்ததற்கு நன்றி. காத்திருப்பு நேரங்கள் சிரமமாக இருக்கலாம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். திட்டமிடப்பட்ட புறப்படும் நேரத்தின்படி தேவையான அனைத்து நடைமுறைகளும் முடிக்கப்பட்டன என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இருப்பினும், தரை உள்கட்டமைப்பு நெரிசல் காரணமாக அனுமதிக்காகக் காத்திருந்தபோது சிறிது தாமதம் ஏற்பட்டது. அது எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டது. உங்கள் பொறுமை மற்றும் புரிதலை நாங்கள் பாராட்டுகிறோம், விரைவில் உங்களுக்கு மீண்டும் சேவை செய்ய ஆவலுடன் காத்திருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

indigo, malavika mohanan

முன்னதாக, தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) எம்.பி. சுப்ரியா சுலே, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் உள்ளிட்ட சிலர், ஏர் இந்தியா விமானச் சேவைகளின் தாமதங்கள் குறித்து விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.