பாஜகவினரை கடுமையாக விமர்சித்து நடிகை குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
நடிகையும், காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில் பல விஷயங்களை பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார். முதலில் குஷ்பு சுந்தர் என்ற பெயரில்தான் அவர் செயல்பட்டு வந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் ‘நக்கத் கான்’ என்ற பெயரையும் ட்விட்டரில் தனது பெயரோடு அவர் இணைத்துக் கொண்டார். அதில் அவர் கூறவருவது பாஜகவினருக்கு மட்டும்தான் நான் ‘நக்கத் கான்’. மற்றவர்களுக்கு நான் எப்போதும் போல குஷ்பு சுந்தர்தான். இதனிடையே தொடர்ச்சியாக குஷ்புவின் மதத்தை வைத்து பலரும் அவரை விமர்சித்ததாக தெரிகிறது.
இந்நிலையில் குஷ்பு ஒரு அதிரடி ட்விட்டை பதிவிட்டுள்ளார். அதில், “ நடிகர் விஜய் ஒரு கிறிஸ்தவர். நான் ஒரு முஸ்லிம். தற்போது பாஜக பக்தாஸ் நடிகர் பிரகாஷ் ராஜின் தாயார் ஒரு கிறிஸ்தவர் என கண்டுபிடித்துள்ளனர். இந்தப் பரிதாபகரமான முட்டாள் மக்கள் எப்போதுதான் நாம் அனைவரும் இந்தியர்கள் என உணரப் போகிறார்கள்? . அவர்கள் முதலில் மனிதர்களுக்குதான் பிறந்தார்களா என்பதை நிரூபிக்கட்டும். அவர்களின் செயல்பாடு உண்மையில் அதுகுறித்து சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள விஜய் ரசிகர்கள், ‘உங்களுடைய காங்கிரஸ் அரசியலில் விஜய் அண்ணாவை ஏன் இங்கு இழுக்கிறீர்கள்’ என கூறியுள்ளனர். ஒரு சிலரோ, “ ஆமாம், விஜய் ஒரு கிறிஸ்தவர்தான். ஆனால் முதலில் ஒரு அவர் தமிழர். உங்களுடைய அரசியல் நோக்கித்திற்கு விஜய் பெயரை பயன்படுத்த வேண்டாம்” என கூறியுள்ளனர்.