பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப், அண்மையில் வெளியிட்ட புகைப்படம், தாய்மைக்காக ஏங்கும் பெண்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியுள்ளது.
மருத்துவ உலகின் தொழில்நுட்பங்கள், 40வயதைக் கடந்த பெண்களும் தாயாகலாம் என்ற நம்பிக்கையை விதைத்துள்ளது. உண்மையில், கடந்த சில தசாப்தங்களாக, பல பிரபலங்கள் குழந்தைகளைப் பெறுவதைத் தாமதப்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாகவே தாமதமான கர்ப்பம் குறித்த கருத்துகள் நாள்தோறும் விவாதிக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், சரியான மருத்துவப் பராமரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கைகளுடன், 40 வயதுடைய பல பெண்கள் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைக் கொண்டுள்ளன. பிரபல பாலிவுட் நடிகை கேத்ரினா கைஃப், அண்மையில் வெளியிட்ட புகைப்படம், தாய்மைக்காக ஏங்கும் பெண்களுக்கு நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சியுள்ளது.
வெற்றிகரமான நடிகையான கேத்ரினா, 2021இல், சக திரை நட்சத்திரமான விக்கி கௌஷலை மணம் முடித்து இல்லற வாழ்வில் நுழைந்தார். இந்நிலையில், தாம் கருவுற்றிருப்பதாக, அண்மையில் சமூக ஊடகங்களில் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்தார். 42 வயதான கேத்ரினா தாயாகி இருப்பது, அந்த வயதில், தாய்மைக்காக எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. 30 வயதைக் கடந்த மகளிருக்கு, தாய்மை என்பது எட்டாக்கனி என்றிருந்த நிலையை, மருத்துவ உலகின் தொழில்நுட்பங்கள் மாற்றியுள்ளன. 40 வயதைக் கடந்த மகளிரும் கர்ப்பம் தரிக்க, IVF, Egg Freezing,ICSI, IUI, Surrogacy போன்ற நவீன மருத்துவம் வழிவகுக்கிறது. பணி உள்ளிட்ட காரணங்களால், தாய்மையை தள்ளிப் போட்டாலும், நவீன மருத்துவம், தாய்மையைப் பரிசளிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மறுபுறம் கத்ரீனா கைஃப் போலவே, பாடகி மரியா கேரி போன்ற பிரபலங்கள் 40 வயதிற்குப் பிறகு குழந்தைகளைப் பெறக் காத்திருந்தனர். 50 வயதில் தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்த பாடகி ஜேனட் ஜாக்சன் போன்ற சிலர், இன்னும் நீண்டநேரம் காத்திருந்தனர், இது ஒரு முதிர்ந்த வயதில் பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான கர்ப்பத்தைப் பெறுவது சாத்தியம் என்பதை நிரூபித்தது. ஹாலிவுட் நடிகையான ஹாலே பெர்ரி, மார்ச் 2008ஆம் ஆண்டு தனது 41 வயதில், நஹ்லா அரியெலா ஆப்ரி என்ற மகளையும், அக்டோபர் 2013இல், தனது 47 வயதில், மகன் மாசியோ ராபர்ட் மார்டினெஸையும் பெற்றெடுத்தார்.
இன்னொரு நடிகையான சல்மா ஹாயெக், தன்னுடைய 41 வயதில், அதாவது 2007ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று வாலண்டினா பலோமா பினால்ட் என்ற மகளைப் பெற்றெடுத்தார். அடுத்து, பல ஆண்டுகளாக கருத்தரிக்க முயற்சித்து வந்த பாடகி செலின் டியோன் தனது 43ஆவது வயதில், அதாவது அக்டோபர் 23, 2010 அன்று, IVF மூலம் எடி மற்றும் நெல்சன் என்ற இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். இன்னொரு பாடகியான மரியா கேரி, தன்னுடைய 41ஆவது வயதில் IVF மூலம் மொராக்கோ மற்றும் மன்ரோ என்ற இரட்டையர்களைப் பெற்றெடுத்தார். அதேபோல் இயக்குநரும் நடன இயக்குனருமான ஃபரா கான் தனது 43 வயதில், அதாவது 2008ஆம் ஆண்டு IVF மூலம் மகள்கள் திவா மற்றும் அன்யா மற்றும் மகன் ச்சார் ஆகிய மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்.